என்னுரை

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் …….

உணவு , உடை , உறைவிடம் என இந்த மூன்றையும் மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள் . ஆதி காலத்து மனித சமூகத்தில் இந்த மூன்றுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றுமே அவரவர் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாகவே இருந்தது .

காட்டில் கிடைத்த கிழங்கு வகைகளே உணவாக மாறியது . இலைகளே ஆடையாக இருந்தது . மலைக்குகைகளே வசிக்கப் போதுமானதாக இருந்தது . காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறியது . இன்றைய சூழ்நிலையில் உணவு என்பது ருசியின் அடிப்படையிலும் , ஆடைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும் , உறைவிடம் அந்தஸ்தின் அங்கமாகவும் மாறியுள்ளது .

ஆனால் இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டிய ஒன்று உண்டு . இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகள் பட்டினியுடன் தூங்கப் போவதும் , சாலையோர குடிசைகளையே தங்கள் உறைவிடமாகக் கருதி வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம் . ஆணோ , பெண்ணோ , ஏழையோ , பரமஏழையோ எவராயினும் உடைகள் இல்லாமல் வாழ முடிகின்றதா ? மானத்தை மறைக்க என்கிற ரீதியில் ஒட்டுத்துணியாவது தங்கள் உடம்போடு ஒட்டிக் கொண்டு வாழ்பவர்களைத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் .

மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும் , வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது . அந்த உடைகளைப் பற்றித் தான் இந்தத் தொடரில் பேசப் போகின்றோம் .

நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா ?

வெள்ளை ஆடைகள் என்றாலும் , நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம் .

உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆடைத் தொழிற் சாலைகளிலும் இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட நவீன வளர்ச்சி வந்துள்ளது . மனித ஆற்றல் அதிக அளவு தேவைப்படாமல் எந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் நமக்குப் பல வசதிகளைத் தந்துள்ளது . ஆனால் பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இன்றும் மூன்று வேளை ரொட்டிக்காக மட்டுமே பணிபுரிபவர் லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர் .

மனித மாண்புகளை உடைத்து எந்திரமாக மாற்றப்பட்ட மனிதக்கூட்டம் தான் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர் . தாய்லாந்து , இந்தோனேசியா , வியட்நாம் , சீனா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் சுவற்றில் காது வைத்துக் கேட்டால் நாம் விக்கித்துப் போய் நிற்கும் அளவிற்கு ஏராளமான சோகக்கதைகள் உண்டு .

ஏனிந்த அவலம் ? என்பதனை நான் இருக்கும் சூழ்நிலையில் , நான் பணிபுரிந்த திருப்பூர் நிறுவனங்கள் வாயிலாக உங்களுக்குச் சொல்லப்போகின்றேன் . ஆடைகளை மட்டும் பேசப்போவதில்லை . ஆடைகளோடு பின்னிப்பிணைந்த நூலிழைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன் . நான் கடந்து வந்த பாதையை , பார்த்த , பழகிய , பாதித்த மனிதர்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் . காதல் , காமம் , ஏக்கம் , இயலாமை , வன்மம் , குரோதம் , பித்தலாட்டம் எனக் கலந்து கட்டி கதம்பம் போல் உள்ள இந்தக் கவுச்சி வாடையைத்தாண்டி கண்ணாடி ஷோரூம் வரைக்கும் பயணித்து வரும் இந்த ஆடைகளைப்பற்றிப் பேசப் போகின்றோம் .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *