7

6. என் பெயர் மாடசாமி

மாடசாமியை முதல்முறையாகச் சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது . ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன் .

அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் . சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது . இது போன்ற நிறுவனங்களைத் திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள் .

இது போலத் திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது . இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும் . இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் .

மனித வாழ்க்கை மட்டுமல்ல . தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதைக் கூர்மையாகக் கவனித்தால் தெரியும் . ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக இருக்கும் . அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் . திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது .

தற்பொழுது அலுவலகமே தேவைப்படாத அளவிற்கு மாற்றம் பெற்று அவரவர் வசிக்கும் வீடுகளில் இருந்து கொண்டே பகுதி நேர பணியாகப் பலரும் பல வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் . நாள் முழுக்க ஒரு நிறுவனத்திற்குள் தங்களை அடைத்துக் கொள்ள விரும்பாதவர்களுக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது . குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளவும் முடிகின்றது . மாதமானால் குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டவும் முடிகின்றது .

திருப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு ஆய்த்த ஆடை முழு உருவம் பெறத் தேவையான துணி நிறுவனத்தின் உள்ளே வந்து விட்டால் ஆடை முழுமையடைந்து கடைசியில் பெட்டியில் போடும் வரைக்கும் உண்டான அனைத்து வேலைகளும் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ளே மட்டுமே நடக்கும் . முக்கிய வேலைகள் தவிர்த்து வேறெந்த வேலைக்காகவும் அந்த ஆடைகள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்லாது . ஆனால் இன்று இந்தச் சூழ்நிலை மாறிவிட்டது . கிடைக்கும் லாபங்கள் குறைய நிறுவனத்திற்குண்டான சுமைகளைப் பலரும் கழட்டி வைத்து விடவே விரும்புகின்றனர் .

நிரந்தரப் பணியாளர் என்றால் வாரம் தோறும் சம்பளம் . இது தவிர அவருக்கென்று அரசாங்கம் நிர்ணயித்த தொழிலாளர் வைப்பு நிதி , சேம நல நிதி போன்ற பல விசயங்களைச் செய்து கொடுக்க வேண்டும் . அப்படியே செய்து கொடுத்தாலும் அந்தக் குறிப்பிட்ட தொழிலாளர் கடைசி வரைக்கும் தான் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு விசுவாசமாகத் தொடர்ந்து இருப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாது . அவருக்குத் தான் இருக்கும் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட ஷிப்ட்டுக்கு பத்து ரூபாய் கிடைத்தால் அல்லது வேறு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அடுத்த நிறுவனத்திற்குச் சென்று விடுவார் .

காரணம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கலாச்சாரம் உருவான பிறகு ஆண் தொழிலாளர்களின் மனோபாவமும் , உழைப்பில் காட்டக்கூடிய அக்கறையும் முழுமையாக மாறிவிட்டது . அதேபோல நுகர்வு கலாச்சாரத்தின் அங்கத்தினராகப் பெண்கள் மாற அவர்களின் எண்ணமும் முழுமையாக மாறிவிட்டது . ” விருப்பம் என்றால் வைத்துக் கொள் . இல்லையெனில் எனக்கு வெளியே வாய்ப்பு உள்ளது ” என்று ஒவ்வொரு தொழிலாளர்களும் தான் பணிபுரியும் நிர்வாகத்தை மிரட்டும் நிலையில் தான் இன்றைய திருப்பூர் ஆய்த்த ஆடைத்துறை உள்ளது .

இதன் காரணமாகக் குறிப்பிட்ட வேலைகள் மட்டும் நிறுவனத்தின் உள்ளே நடக்க மற்ற அத்தனை வேலைகளுக்கும் வெளியே சென்று மீண்டும் உள்ளே வருகின்றது . அல்லது குறிப்பிட்ட வேலைக்காக மட்டுமே வெளியே இருந்து ஆட்களை வரவழைக்கும் (OUT SOURCING) நபர்கள் மூலம் பல வேலைகள் நடக்கின்றது .

தைத்து மட்டும் கொடுப்பது , ஆடைகளில் உள்ள பிசிர்களை மட்டும் நீக்கி கொடுப்பது , உருவமான ஆடைகளைத் தரம் பார்த்து அவற்றைப் பிரித்துக் கொடுப்பது , ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் கறைகளை நீக்கிக் கொடுப்பது , இது தவிரப் போகாத கறைகளை எடுத்துக் கொடுப்பது , ஆடைகளில் வரும் மிகச் சிறிய ஓட்டைகளை வெளியே தெரியாத அளவிற்குச் சரி செய்து கொடுப்பது , இறுதியில் சரியான தரம் பிரிக்கப்பட்ட ஆடைகளைத் தேய்த்துப் பாலிபேக்கில் போட்டு பெட்டி போட்டுக் கொடுப்பது என்று இத்துறை சார்ந்த ஏராளமான துணைப்பணிகளுக்கென்று திருப்பூர் முழுக்க லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த கூலி அடிப்படையில் பல நூறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் .

ஒரு ஆய்த்த ஆடை முழுமையடைய எத்தனை வேலைகளை உள்ளதோ ? அனைத்து வேலைகளுக்கும் பல நிறுவனங்கள் உள்ளது . இதிலும் போட்டியுண்டு . பலதரப்பட்ட சவால்களைத் தாண்டி நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் . பெரிய நிறுவனங்கள் இது போன்ற சிறிய நிறுவனங்களை வாயில் போட்டு மென்று துப்பக் காத்திருப்பார்கள் . வேலை முடிந்ததும் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள் . கடைசியாகச் சரியாகத் தைத்துக் கொடுத்தாலும் ” சரியான நேரத்தில் நீ கொடுக்கவில்லை . இதனால் எனக்கு இத்தனை லட்சம் நட்டம் . நீ தான் பொறுப்பு ” என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு பாதிக்குப் பாதிப் பணத்தைக் கொடுப்பார்கள் .

இது போன்று ஆடைகளைத் தைத்து மட்டுமே கொடுக்கும் நிறுவனத்தில் தான் மாடசாமி பணியாற்றிக் கொண்டிருந்தான் .

பொதுவாகத் தொழில் நகரங்களில் இரவு பகல் என்றொரு வித்தியாசமே இருக்காது . ஆறாண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூர் என்பது 24 மணி நேரமும் இயங்கும் உலகமாகவே இருந்து வந்தது . சாயப்பட்டறை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து 700 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடுவிழா கண்டதும் பகலில் மட்டும் செயல்படும் உலகமாக மாறியுள்ளது . இது தவிரச் சமீப காலமாகத்தான் திருப்பூரில் இரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமை வேலையென்றால் என்றால் தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர் . காரணம் தங்களுக்குக் கிடைத்த விடுமுறை தினத்தை மது அருந்தும் தினமாக மாற்றிக் கொண்ட உழைக்கும் வர்க்கத்தினரால் அடுத்த நாள் செயல்பட முடியாதவர்களாக மாறி விட்டனர் .

இன்றைய சூழ்நிலையில் ஐம்பது சதவிகித நிறுவனங்களில் அறிவிக்கப்படாத விடுமுறை தினமாகத் திங்கள் கிழமை இருந்து வருகின்றது . ஆண் தொழிலாளர்கள் வருவதே இல்லை . கையில் செலவளிக்கக் காசு இல்லாத போது மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மேலை நாட்டு நாகரிக கலாச்சாரத்தில் வாழவே விரும்புகின்றனர் .

ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் . உழைப்புக்கு அஞ்சாத கூட்டமது . இன்று பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர் . மிச்சமும் சொச்சமும் தான் இந்தத்துறையில் உள்ளனர் .

திருப்பூருக்கென்று ஒரு தனியான மொழியுண்டு . வாசிக்கும் பொழுதே உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும் . அந்த மொழி ஆங்கிலமா ? தமிழா ? என்ற குழப்பத்தை உருவாக்கும் . ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம் . ஒரு நிறுவனம் காலை எட்டு மணிக்கு தொடங்கி இரவு எட்டு மணிக்கு முடிந்தால் தொழிலாளர்களுக்கு ஒன்னறை ஷிப்ட் என்ற அர்த்தம் . அதுவே இரவு பணி என்றால் 12 மணி வரை நடக்கும் . மொத்தமாக இரண்டு ஷிப்ட் என்பார்கள் . அதற்கு மேலே அதிகாலை வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தால் அதனை ” விடிநைட் ” என்று அழைப்பார்கள் . மறுபடியும் எப்போது போலக் காலையில் எட்டு மணிக்கு பணி தொடங்கும் . இடைப்பட்ட நேரத்திற்குள் தொழிலாளர்கள் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் .

தூங்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்காது . குறிப்பிட்ட பெட்டிகள் லாரியில் ஏற்றும் வரைக்கும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள் .

குறிப்பிட்ட வேலைகள் முடித்தே ஆக வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகத் தூக்கம் மறந்து ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் . தொழிலாளர்கள் மட்டுமல்ல . ஒரு நிறுவனத்தின் அலுவலகம் சார்ந்த ஊழியர்களைத் தவிர்த்து உற்பத்தித்துறை சார்ந்து செயல்படும் எவரும் இப்படித்தான் இங்கே பணியாற்ற முடியும் .

இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் . ஆதிக்கம் , கொடுமை என்று நீங்கள் எத்தனை வார்த்தைகளை வேண்டுமென்றாலும் எழுதி வைத்துக் கொண்டு வருத்தப்படலாம் . ஆனால் இது போன்ற வார்த்தைகளைக் கோடிக்கணக்கில் முதலீடுகளைப் போட்டு விட்டு இரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் முதலாளிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும் .

ஒரு வேளை அப்போது உங்கள் எண்ணம் மாறக்கூடும் . இவர்கள் ஒரு பக்கமும் நாளை இந்த வேலை நமக்கு இருக்குமா ? என்று தடுமாறும் தொழிலாளர்களுக்கும் இடையே தான் இன்றைய திருப்பூர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது .

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பெரிய நிறுவனத்தில் உற்பத்தி துறையில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன் . ஒவ்வொரு நிறுவனத்திலும் வாரத்திற்கென்று இலக்கு வைத்திருப்பார்கள் .

ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது இறுதி இலக்காக இருக்கும் . கப்பல் மூலம் செல்வதாக இருந்தால் தூத்துக்குடிக்கும் விமானம் மூலம் செல்வதாக இருந்தால் சென்னைக்கும் சென்றாக வேண்டும் . விமானம் மூலம் சென்றடைய குறிப்பிட்ட நாள் என்ற கணக்கு தேவையில்லை . குறிப்பிட்ட விமான வசதிகளைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் நாம் பெட்டிகளை அனுப்பலாம் .

நான் இருந்த நிறுவனத்தின் அந்த வாரத்தின் இலக்கின்படி குறிப்பிட்ட ஆடைகளை வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பியாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருந்தேன் .

ஆள் பற்றாக்குறையின் காரணமாக மற்றொரு சிறிய நிறுவனத்தில் தைத்துக் கொடுப்பதற்காகக் கொடுத்து இருந்தோம் . அந்தச் சிறிய நிறுவனத்தில் தான் மாடசாமியை சந்தித்தேன் .

பகல் பொழுதில் முடித்துத் தருவதாகச் சொல்லியிருந்தார்கள் . ஆனால் வந்தபாடில்லை . மீண்டும் கேட்ட போது நள்ளிரவில் முடிந்து விடும் என்றார்கள் . இரவு ஒரு மணிக்குள் வந்து சேர வேண்டிய ஆடைகள் வராத காரணத்தினால் நானே நேரிடையாக அந்த நிறுவனத்திற்குச் சென்று சேர்ந்த போது அந்த நிறுவனம் இருளில் மூழ்கியிருந்தது . எவரும் வேலை செய்வதற்கான அறிகுறியே இல்லை . என் மனதிற்குள் பயம் எட்டிப்பார்த்து . நிச்சயம் நாளைய பொழுது நமக்கு மண்டகப்படி தான் என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்தேன் . கதவு லேசாகத் திறந்தே இருந்தது . உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு விளக்கு எறிந்து கொண்டிருக்க அதன் கீழ் ஒருவர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் . மனதிற்குள் ஆசுவாசமாக இருந்தது . லேசாக இருமிக் கொண்டே அவரை நோக்கி நகர்ந்தேன் . அவர் என் குரலைக் கேட்டதும் அவசரமாக எழுந்து நின்றார் . அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் கீழே விழ அப்போது தான் அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தேன் . பல புத்தகங்கள் அந்த மேஜையில் இருந்தது . எல்லாமே தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் . உள்நாட்டு , வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் . மனதிற்குள் ஆச்சரியம் பரவியது . இந்த நேரத்தில் இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன் .

ஒல்லியான உருவம் . அரும்பு மீசை . கிராமத்து முகம் . ஆடம்பரமில்லாத உடை . இடுங்கிப் போன கண்கள் . தொடர்ச்சியான இரவுப்பணியின் காரணமாக நிரந்தரமாக உருவான கண்ணக்கதுப்புக் கருவளையம் . நான் அவர் பிம்பத்தை உள்வாங்கிக் கொண்டு அந்தப் பகுதியில் எனக்கான பெட்டிகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா ? என்பதைப் பார்த்துக் கொண்டே மென்மையாக அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு நான் வந்த வேலை குறித்துக் கேட்டேன் .

என்னை விடப் பல மடங்கு வயது குறைவாக இருந்தாலும் நான் மரியாதையாகப் பேசிய வார்த்தைகள் அவருக்கு உற்சாகத்தைத் தந்து இருக்க வேண்டும் . அந்தச் சமயத்திலும் அவர் களைப்பின்றி உற்சாகமாகப் பேசிய வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது .

” எல்லாமே ரெடியா இருக்கு சார் . உங்க கம்பெனியிலே இருந்து யாராவது வருவாங்கன்னு சொன்னாங்க . எனக்கு உங்க கம்பெனி எந்த இடத்தில் இருக்குன்னு தெரியாது . அதான் இங்கே உட்கார்ந்துட்டேன் ” என்றார் .

அப்போது தான் அவன் ஒரு பலிகிடாவாக இந்த நிறுவனத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டேன் .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book