6

5. யோசிக்காதே ? ஓடிக் கொண்டேயிரு !

சென்ற அத்தியாயத்தில் ஒரு ஆய்த்த ஆடையின் உருவாக்கத்திற்கான முதல் உழைப்பு எங்கிருந்து தொடங்குகின்றது ? என்பதைப் பார்த்தோம் . ஒரு ஆடை முழு உருவமாகி ஏற்றுமதி ஆகின்ற வரையில் இந்தத் துறையில் என்ன நடக்கின்றது ? எவரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதனை இந்தத் துறையில் வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில கதாபாத்திரங்கள் மூலம் படிப்படியாக இந்தத் துறையைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சிப்போமா ? இதனுடன் தொழிலாளி மற்றும் முதலாளி என்ற வர்க்கபேதத்தில் உள்ள வினோத முரண்பாடுகளைப் பற்றியும் வரப் போகின்ற அத்தியாயத்தில் பேசுவோம் .

இத் துறையில் 22 வருடங்கள் அனுபவங்கள் உள்ள நான் கற்றதும் பெற்றதும் ஏராளம் . நான் இத்துறையில் நிலையான பதவி அமையவே ஏழு வருடங்கள் போராட வேண்டியிருந்தது . அதன் பிறகு தான் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . காரணம் அதுவரையிலும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த காட்டாறு வெள்ளத்தில் சிறு துரும்பாகத் தத்தளித்துக் கொண்டிருந்தேன் . எதையும் கவனிக்க நேரமில்லாமல் எவர் எவரோ இடும் கட்டளைகளை நேரம் மறந்து நிறைவேற்றிக் கொடுப்பவனாக இருந்துள்ளேன் . 20 மணி நேர பணியென்பது கடந்து போன என் வாழ்க்கையில் பல மாதங்கள் இயல்பானதாகவே இருந்தது . உடலும் மனதும் அதற்குத் தகுந்தாற்போலவே உருமாறத் தொடங்கியது .

வாழ்க்கையை ரசித்தே வாழ்ந்து பழகியவனுக்கு இது நரக வேதனையாக இருந்தது . உழைத்து விட்டு ஒதுங்கி விட அதன் பலன்கள் எல்லாம் எவர் எவருக்கோ கிடைத்துக் கொண்டிருந்தது . நான் தேடிக் கொண்டிருந்த ‘அங்கீகாரம்’ என்ற வார்த்தை அர்த்தமற்றுச் சிரிக்கத் தொடங்கியது .

எனக்கான நேரம் வந்தது . வந்த நேரத்தை முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கை வழிநடத்தியது . இந்தத்துறையில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது . உள்ளுற வைத்திருந்த வன்மத்தை வரி வரியாகப் பிரித்து வைத்திருந்தேன் .

அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி , அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன் .

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களைக் கவிழ்த்தவர்கள் , குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள் , உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள் , தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விடத் தங்களது பொருளாதார வளர்ச்சியை றுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது .

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது . ஒருவர் பணத்தை முதலீடாகப் போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார் . மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தைத் துரத்திக் கொண்டிருக்கின்றார் . மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது . முதலீடு செய்தவர் முதலாளி . ஆனால் அவரின் லாபத்தைத் தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர் .

ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்குத் தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாகப் பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே . கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய்ச் சிக்கிவிடுகின்றது . இப்படிச் சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும் . வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஆனால் நான் தன்னிலை மறந்ததே இல்லை . எனக்கென்று ஒரு நோக்கம் இருந்தது . அதற்கு மேலாக அந்த நோக்கத்திற்குள் ஒரு சிறப்பான வாழ்வியல் தத்துவம் இருந்தது . ஒவ்வொரு காலகட்டத்திலும் மனதிற்குள் உருவாகும் காயங்கள் அதிகமாக இருந்தாலும் சீழ்பிடிக்காத அளவிற்கு நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு மருந்தாக இருந்து உதவியது .

வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறேதும் உலகில் உண்டா ?

இங்கு எல்லோருமே தொடக்க நிலையில் கஷ்டப்படத்தான் செய்கின்றார்கள் . தனது வளர்ச்சியை நோக்கி சிந்தித்து மேலே வரத் துடிக்கின்றனர் . தன்னை வளர விடாமல் தடுக்கும் காரணிகளை நினைத்து புலம்புவதோடு நிறுத்திக் கொள்கின்றனர் . ஆனால் அதற்கான காரணங்களைப் பற்றி யோசிக்கும் போது மட்டும் தன் நிலை என்ன ? தற்போதைய தன் தகுதி என்ன ? என்ற கேள்வி பிறக்கும் என்பதை உணர மறுக்கின்றனர் . எதை முதன்மையாக வளர்த்துக் கொள்ள வேண்டும் ? எந்தச் சமயத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணராமல் தான் பெற்றுள்ள வன்மத்தை மட்டுமே மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பவனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே வளர முடிவதில்லை .

வாழ்க்கை முழுக்கப் புலம்புவனாகவே வாழ்ந்து பழகியவனுக்கு அவன் பார்க்கும் அத்தனை பேர்களும் எதிரியாகத் தான் தெரிவார்கள் .

கேவலமான எண்ணங்கள் தான் மேலோங்கும் . அதன் பிறகே ஒருவனின் சுய புத்தி மழுங்கிப் போய்விடத் தொடங்கின்றது . கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று தவறான பாதையில் சென்று கடைசியில் வாழ்க்கை அலங்கோலத்தில் முடிகின்றது .

கிராமத்து வாழ்க்கை , கிராமம் சார்ந்த சிந்தனைகள் எதுவும் தொழில் நகர வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து கொள்ளவே எனக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது . புதிய மாற்றங்கள் என்னை நோக்கி வரத் தொடங்கியது . நிலையான உயர் பதவியை நோக்கி என் வாழ்க்கை நகரத் தொடங்கியது .

அடுத்தடுத்து நிறுவனங்கள் மாறினாலும் மேலே உயர முடிந்தது . வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமானது . நிர்வாக அறிவு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த தொடங்கிய போது தான் மனிதர்களின் உள் மன விகாரத்தைப் பற்றி ஆராய முடிந்தது . ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும் சொல்லுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது . முதலாளிவர்க்கம் என் தனித்தன்மையாக இருக்கின்றார்கள் . ஏன் எப்போதும் தொழிலாளிவர்க்கம் உழைப்பவர்களாகவே மட்டும் இருந்து விடுகின்றார்கள் போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கத் தொடங்கியது .

என்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மனவோட்டத்தை அறியத் துவங்கினேன் . ஒவ்வொரு தனிமனிதர்களின் எண்ணங்கள் , செயல்கள் , வித்தியாசங்கள் என ஒவ்வொன்றும் எனக்குப் புரியத் தொடங்கியது .

உழைப்பு , திறமை என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே பல விசயங்கள் உள்ளது . ஆய்த்த ஆடை துறை மட்டுமல்ல . இந்தியாவில் நீங்கள் காண்கின்ற எந்தத்துறையிலும் நூறு சதவிகிதம் திறமைசாலிகள் இல்லை . அதே போல நூறு சதவிகித உழைப்பாளிகளும் இல்லை . ஆனால் இங்கே குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றார்கள் . ஏன் ? பள்ளி , கல்லூரிகளில் படிப்பில் சுட்டியாய் இருந்தவர்கள் வாழ்க்கையில் முழுமையாக ஜெயித்து விடுகின்றார்களா என்ன ? எந்த நாட்டில் , எந்த இடங்களில் வாழ்பவராக இருந்தாலும் சமயோஜித புத்தியுள்ளவர்களால் மட்டுமே பல துறைகளில் உச்சத்தைத் தொட முடிகின்றது .

ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தால் ஆயிரக்கணக்கான பேர்கள் இருப்பார்கள் . உச்சகட்ட பதவி என்பது ஏழெட்டுப் பேர்களுடன் முடிந்து விடும் . அதற்குக் கீழே வருகின்ற அத்தனை பேர்களும் அல்லக்கை , நொள்ளக்கை , நொந்தகை வகையினராக இருப்பர் . அதிலும் குறிப்பாக உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போலத் தினசரி தன் வாழ்க்கையை நொந்தபடியே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா ?

இந்த வகை உழைப்பாளிகள் திருப்பூரில் ஒவ்வொரு நிறுவனத்திலும் நூற்றுக்கணக்கான பேர்கள் உள்ளனர் . ஆய்த்த ஆடைத்துறையில் உள்ளுற இருக்கும் துறைகள் வெவ்வேறானதாக இருக்கலாம் . ஆனால் இவர்களுக்கு வியர்வை என்ற பெயரில் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கும் . இவர்களின் உழைப்பு நம்மைச் சிந்திக்க வைக்கும் .

இந்திய ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு . எவர் வேண்டுமானாலும் என்ன தொழில் என்றாலும் தொடங்கலாம் . ஆனால் தொழில் தொடங்கிய அத்தனை பேர்களும் ஜெயித்து விடுவதில்லை . ஜெயித்தவர்களும் நிலையாக நீண்ட காலம் நிலைத்திருப்பதும் இல்லை . தொடர்ச்சியாக ஜெயித்து நீண்ட காலம் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தில் அவனைச் சந்தித்தேன் .

அவன் பெயர் மாடசாமி . பெயர் பொருத்தமோ ? ராசிப் பொருத்தமோ தெரியவில்லை , அந்த நிறுவனத்தில் அவன் மாடு போலத் தான் நேரம் காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருந்தான் . யோசிப்பதை மறந்து காலை முதல் நள்ளிரவு வரைக்கும் வாரம் முழுக்க உழைத்தவனின் கதையைக் கேட்டால் அவலத்தின் உச்சமாக இருக்கும் .

காரணம் அவனின் சொந்த ஊரில் செயல்பட முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உயிருள்ள பிணமாக இருக்கின்றான் .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book