5 4. து . மு – து . பி

4. து . மு து . பி

என் அறையை விட்டு வெளியே வந்தேன் . 25000 சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக இருந்தன . பல எந்திரங்களில் தொழிலாளர்கள் (TAILORS) இல்லை . அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது .

தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது . எந்திரங்களின் சப்தமும் , தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன் . ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது .

STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது . மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன . SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது . அங்கிருந்த சிலர் என்னைச் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர் .

அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை .

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன . ஒவ்வொரு துறையும் ஒரு உலகம் . ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது . அந்த நாட்டிற்கு ஒரு மன்னர் , ஒரு மந்திரி , ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும் . அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள் . அவற்றை நாம் படிப்படியாகப் பார்க்கலாம் .

ஆய்த்த ஆடைத்துறையைப் பற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த இடத்தில் இத்துறையின் மொத்த அடிப்படை விசயங்களைப் பார்த்து விட வேண்டும் . அப்போது தான் ஒரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள ஏராளமான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .

வரலாற்றை விருப்பமாகப் படிப்பவர்களுக்குக் கி . மு . கி . பி என்ற வார்த்தை தெரிந்து இருக்கக்கூடியதே . இதைப் போல இத்துறையில் இரண்டு வார்த்தை முக்கியமானது . து . மு என்றால் துணிக்கு முன் . து . பி என்றால் துணிக்குப் பின் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் மொத்தத்தையும் நம்மால் கொண்டு வந்து விட முடியும் .

ஆய்த்த ஆடைகளை ஆங்கிலத்தில் கார்மெண்ட்ஸ் (GARMENTS) என்கிறார்கள் . திருப்பூர் என்றாலே பலரும் பனியன் கம்பெனி தானே ? என்று தான் சொல்கிறார்கள் . இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் குறித்தோ , அதன் செயல்பாடுகளைப் பற்றியோ , பெரும் பதவியில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் போலப் பெருந்தொகையைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித் திருவாளர் பொதுஜனத்திற்குத் தெரிய வாய்பில்லை .

இந்தத் துறை சார்ந்த பலவற்றைப் பலராலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை . பனியன் , ஜட்டி என்பது தனியான உலகமது . இந்தத்துறை இந்தியா முழுக்க உள்ள உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றது . இந்த வியாபாரம் இந்திய ரூபாயில் நடக்கின்றது .

ஆனால் ஏற்றுமதித்துறை வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்தே இயங்குகின்றது . உலகில் உள்ள பலதரப்பட்ட கரன்சியில் பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போதிலும் அமெரிக்காவின் டாலர் என்பதே இன்று வரையிலும் முக்கியமானதாக உள்ளது . இரண்டாவது இடத்தில் ஐரோப்பாவின் யூரோ உள்ளது .

இப்போது து . மு . து . பியைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்து விடலாம் .

துணிக்கு முன் என்ற உலகத்தில் மூன்று வார்த்தைகள் முக்கியமானது . பஞ்சு , நூல் , துணி . பஞ்சு குறித்து நாம் தெரிய வேண்டுமென்றால் விவசாயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . தற்பொழுது இந்தியாவில் விவசாயம் என்பது தேவையற்ற ஒன்று என்று ஆட்சியாளர்கள் கருதுவதால் விளைவிக்கும் பஞ்சு பொதுச் சந்தைக்கு வருகின்றது . அதன் பிறகு அதன் பயணம் தொடங்குகின்றது என்பதோடு அந்தத் துறைக்கு முற்றும் என்பதோடு நிறுத்திக் கொள்வோம் . காரணம் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தினால் எந்தக் காலத்திலும் இந்தியா முன்னேற முடியாது என்று ஆட்சியாளர்கள் கருதுவதோடு இன்றைய சூழ்நிலையில் மக்களும் அதையே நம்பத் தொடங்கி விட்டனர் .

பழைய சரித்திர குறிப்புகளைப் படிக்க வாய்ப்பிருந்தால் தேடிப்பிடித்துப் படித்துப் பாருங்கள் . இந்தியாவிற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்த யவனர்கள் , ரோமபுரி மக்கள் தொடங்கிக் கடைசியில் உள்ளே வந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் வரைக்கும் இங்கு வந்ததற்குக் காரணம் இங்குக் கொழித்துக் கொண்டிருந்த விவசாயத்தை வைத்துத்தான் . மிளகை வாங்கிக் கொண்டு பண்டமாற்றாகத் தங்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் .

ஆனால் இன்றோ பஞ்சு முதல் அத்தனை முக்கியமான பொருளையும் ஏற்றுமதி செய்து விட்டு பெட்ரோலை இறக்குமதி செய்ய முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் . நம் வாழ்க்கையும் , விலை வாசிகளும் பஞ்சு போலப் பறந்து கொண்டிருக்கின்றது .

பஞ்சு நூலாக மாற நூற்பாலைக்கு (TEXTILE MILL) வருகின்றது . லட்சக்கணக்கான எளிய மக்களின் காமதேனு பசுவாக இந்தத் துறை உள்ளது .

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து தற்பொழுது குப்பைக் கூடைக்குப் போய்ச் சேர்ந்து விட்ட காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின் காரணமாகத் தங்கம் போல மாதத்திற்கு மாதம் விலை உயர்ந்து எட்டாக் கனியாக மாறிவிட்டது . குறிப்பாக ஆன் லைன் வர்த்தகம் என்ற வார்த்தையின் மூலம் சூதாட்டம் போல இந்தத்துறை மாற்றப்பட்டுப் பஞ்சை விளைவித்த விவசாயிக்கு எதுவும் கிடைக்காத அளவுக்கு இடைத்தரகர்களின் ராஜ்ஜியமாக உள்ளது .

இந்தியாவில் தற்பொழுது இந்தத்துறை மிக நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது .

இந்த உலகம் இரண்டு விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . ஒன்று , நூறு சதவிகிதம் ஏற்றுமதி மற்றொன்று உள்நாட்டு சந்தை . இந்தியாவில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட வசதிகள் கொண்ட நூற்பாலைகள் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் உள்ளன . அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் இதமான காற்று இந்தத் தொழிலுக்கு முக்கியமானது .

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சு மற்றும் நூல் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . விளைந்த பஞ்சை பதப்படுத்தி , ரகம் வரியாகப் பிரித்து , சுத்தம் செய்து நூலாக மாறும் வரையிலும் தனித்தனி உலகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . நூல் தான் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழிலுக்கு ஆதாரம் .

நூலில் பல ரகங்கள் உள்ளது .

இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள நீங்கள் இரண்டு காலத்தை யோசித்துப் பார்த்தாலே போதுமானது . கோடை காலம் . குளிர் காலம் . கோடை காலத்தில் நாம் போடும் உடைகள் குளிர் காலத்திற்கு உதவுமா ? இந்த இரண்டு காலத்திற்கும் பயன்படுத்தும் நூலின் தன்மையும் வெவ்வேறாக இருக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்கவும் . அதே இந்த ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தும் விதங்கள் எதிரெதிர் துருவமாக இருக்கும் .

திருப்பூருக்குள் உள்ளே வரும் நூல் ஆய்த்த ஆடைக்கான துணியாக மாற எத்தனை படிகளைக் கடக்க வேண்டும் ? YARN ( நூல் ), KNITTING ( துணி அறவு ), BLEACHING & DYEING ( சலவை மற்றும் சாயப்பட்டறை ) COMBACTING ( வண்ணமேற்றிய துணியை நாம் விரும்பும் அளவிற்கு வெட்ட மாற்றித்தரும் எந்திரம் .

இதற்குப்பிறகே துணியாக உருவம் பெறுகின்றது . நீங்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள நம்முடைய சட்டையை மடிப்புக் கலையாமல் தேய்த்துத் தருகின்றார்கள் அல்லவா ? அதைப்போல இந்த எந்திரங்கள் அந்தப் பணியைச் செய்து கொடுக்கின்றது ) கோடை கால ஆடைகளுக்கும் குளிர் கால ஆடைகளுக்கும் சம்மந்தம் இருக்காது .

இன்னும் எளிமையாக உங்களுக்குப் புரிய வேண்டுமென்றால் குளிர்காலத்திற்கு நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர் ஆடையைக் கோடை காலத்தில் பயன்படுத்த முடியுமா ?

இனி எங்கிருந்து இந்தத் தொழில் தொடங்குகின்றது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா ?

எனக்கு இந்த வடிவமைப்பில் , இது போன்ற பிரிண்ட் அடித்து இந்தந்த அளவுகளில் இத்தனை ஆயிரம் ஆடைகள் தேவை ? என்று ஒரு வெளிநாட்டுக்காரர் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதியாளரிடம் கேட்கின்றார் ? என்று வைத்துக் கொள்வோம் . அவர் உடனே அந்த வெளிநாட்டுக்காரர் மின் அஞ்சல் வாயிலாகக் கொடுத்த விபரங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கவனமாகக் குறிப்பு எடுத்துக் கொள்வார் . வெளிநாட்டுக்காரர் ஆடையில் எதிர்பார்க்கும் பிரிண்ட்டிங் மற்றும் எம்பிராய்ட்ரி டிசைன் வேலைகள் சார்ந்து , அதற்கு ஆகும் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு , அந்த ஆடைக்கு உத்தேசமாக எந்த அளவுக்குத் துணி தேவைப்படும் என்று தனது கணக்கீடுகளைப் போட தொடங்குவார் . தொடர்ந்து தேவைப்படுகின்ற நூல் மற்றும் வண்ணமேற்றிய ஒரு கிலோ துணி உருவாக்க என்ன செலவு என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்வார் .

தைத்து முடித்து அவர் கேட்கும் அலங்கார PACKING வசதிகளோடு மொத்த ஆடைகளையும் கப்பல் அல்லது விமானம் வழியே அவர்களுக்கு அனுப்பி வைக்க என்ன செலவாகும் என்பதோடு தன் லாபத்தைச் சேர்த்துக் கொள்வார் .

மொத்தமாக இந்தத் துணியாக்கத்தில் மற்றும் உருவாக்கத்தில் (PROCESS LOSS & PCS. REJUCTION) எத்தனை சதவிகிதம் இழப்பு ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வார் .

இறுதியாக ஒரு ஆடையின் விலை தெரிய வரும் .

YARN COST

KNITTING COST

DYEING/BLEACHING COST

COMBACTING/STENDER COST

PROCESS LOSS PERCENTAGE

CLOTH COST (PER KGS. CLOTH)

—————————————-

STITCHING TO PACKING COST

ACCESSORIES COST

FREIGHT COST

REJUCTION COST

PROFIT PERCENTAGE

இதற்குப்பிறகு தான் ஆலமரம் தேவைப்படாத பஞ்சாயத்து மேடை அறிமுகம் ஆகின்றது . அதாவது பேரம் தொடங்கும் . அந்தப்பக்கம் நீ சொல்லும் விலை எனக்குக் கட்டுபிடியாகாது ?. சீனாவில் இந்த விலைக்குக் கிடைக்கும் ? வேறு நாட்டில் இதைவிடக் குறைவாகவே எனக்குக் கிடைக்கும் ? என்று முறுக்குவார் . இல்லையில்லை நீ எதிர்பார்க்கும் விலையில் நான் கொடுத்தால் என் கம்பெனியை ஒரு வருடத்திற்குள் இழுத்து மூட வேண்டும் ? என்று இவர் திமுறுவார் . மாட்டுச் சந்தை போலப் பேரம் நடக்கும் . கூச்சல் இல்லாமல் மின் அஞ்சல் வழியே தொடர்ச்சியாக அடிதடி நடந்து இறுதியாக இரண்டு கைகளிலும் துணியைப் போட்டுக் கொண்டு விரலைத் தொட்டு இறுதி விலை உறுதியாகும் .

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தின் முதல் உழைப்பு இங்கிருந்தே தொடங்குகின்றது .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *