3 2 . என் கேள்விக்கு என்ன பதில் ?

2 . என் கேள்விக்கு என்ன பதில் ?

” அத்துவானக்காடு . ஆள் நடமாட்டம் கூட அதிகமாக இருக்காது . அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களை நாம் பார்க்கும் போது சுடுகாடு போலவே தெரியும் . அந்தப் பகுதியில் அந்த நிறுவனத்தின் கட்டிடம் மட்டும் தனியாகத் தெரியும் . ஊருக்குள் இருந்த கட்டிடத்தில் இருந்து மாறி இரண்டு வருடத்திற்கு முன் தான் அங்கே மாறியிருக்கின்றார்கள் . ஒரு இறக்குமதியாளர் (BUYER) எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளும் உள்ளே உள்ளது . அந்த நிறுவனத்தின் பக்கத்தில் வீடுகள் கூட எதுவும் கிடையாது . இப்போது தான் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றது . தூரத்தில் சாலையில் இருந்து நாம் பார்த்தால் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள வடிவம் மட்டும் தெரியும் . அந்தக் கூரை வடிவம் பச்சை நிறத்தில் இருக்கும் . காரணம் இயற்கைக்குத் தொந்தரவு இல்லாத அமைப்பில் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அந்த நிறுவனத்தை அமைத்துள்ளனர் “

என் நண்பர் எனக்கு முதல்முறையாகப் பஞ்சபாண்டவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்த போது அந்த நிறுவனத்தைப் பற்றி அடையாளம் என்று இப்படித்தான் சொன்னார் . அப்பொழுது திருப்பூருக்குள் இப்படிப்பட்ட நிறுவனமும் உள்ளதா ? என்ற ஆச்சரியம் என் மனதில் உருவானது .

நண்பர் சொன்னபடி குறிப்பிட்ட நாளில் அடையாளம் கண்டு அந்தக் கட்டிடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன் . நுழைவாயிலில் செக்யூரிட்டி மக்கள் அவர்கள் பணியைச் செய்து கொண்டிருந்தனர் . ஆட்களும் , வாகனங்களும் உள்ளே வெளியே வந்து போய்க் கொண்டிருக்க அந்த இடமே சுறுசுறுப்பாக இருந்தது . தூரத்தில் இருந்து அந்தக் கட்டிடத்தையும் பார்வையிட்டதற்கும் அருகே வந்து பார்த்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன .

நான் வாகனத்தைச் செக்யூரிட்டி சொன்னபடி ஓரமாக வைத்து விட்டு அவர்கள் வாகனத்திற்கென்று தந்த அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டேன் .

நான் வந்துள்ள விபரத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னபோது உள்ளே அழைத்துக் கேட்டனர் . அந்தச் சமயத்தில் இந்த நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்த நண்பர் சொன்ன வாசகம் மீண்டும் ஒரு முறை என் மனதில் வந்து போனது .

” உன்னைப் போலக் கரடுமுரடான ஆட்களுக்கு ஏற்ற நிறுவனம் அது தான் . உன் திறமைகளைப் பற்றித் தெரியாமலேயே இங்கே குப்பை கொட்டி கொண்டு இருக்காதே . நீ அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் . உன்னுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சியென்பது திட்டமிடப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் தான் இருக்க வேண்டும் . அது போன்ற அமைப்பில் செயல்படும் போது தான் உன் திறமைகளின் மதிப்பீடு உனக்கே புரிய வரும் ” என்றார் .

தொடர்ந்து சொன்ன விசயங்கள் தான் என்னை எந்த அளவுக்குப் புரிந்துள்ளார் என்பதை உணர்ந்து கொள்வதாக இருந்தது .

” கடிவாளம் போட்டது போல இருக்கும் . அதே சமயத்தில் உன்னை மெருகேற்றிக் கொள்ள உதவியாய் இருக்கும் . திருப்பூருக்குள் இன்னமும் சரியான நிர்வாக அமைப்பு எந்த நிறுவனத்திலும் உருவாக்கப்பட வில்லை . உருவாக்கும் ஆசையும் எவருக்கும் இல்லை . ஆனால் சிறு தொழில் போலச் செயல்படும இவர்களால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது .” என்று நண்பர் பேசிய போது எனக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது . நிர்வாகத்திற்குச் சிஸ்டம் வேண்டும் என்கிறார் . தன்னை அதற்குள் பொருத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் .

ஆனால் அதுவரையிலும் நான் பார்த்த ஒவ்வொரு நிறுவனத்திலும் தலையில்லா முண்டம் போலத்தான் நிர்வாக அமைப்பு இருந்தது .

அதற்குள் தான் முதல் பத்து வருடங்கள் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன் .

என் மேல் உள்ள அக்கறையின் காரணமாகவும் , என் திறமைகளின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையில் பால் என்னை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி விடக் குறியாக இருந்தார் . அப்போது தான் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு ஒரு நாள் வந்திருந்த போது வேறு சில உரையாடல்களுடன் பஞ்சபாண்டவர்கள் இருந்த நிறுவனம் பற்றியும் அங்குள்ள தேவையைப் பற்றியும் கூறினார் . எல்லா வசதிகளும் இருந்து உற்பத்திப் பிரிவில் சரியான தலைமைப் பொறுப்பு இல்லாத காரணத்தால் மாதம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஆடைகள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்வாகம் கடந்த ஆறுமாதம் 25000 ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது ” என்றார் .

” இதன் காரணமாக மொத்த நிர்வாகமும் நிதிச் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது ” என்பதைக் கூடுதல் தகவலாகச் சொன்னார் .

நண்பரிடம் சங்கடப்படாமல் சட்டென்று கேட்டேன் .

அப்படியென்றால் மாதச் சம்பளமே சரியாக வராதே என்றேன் .

ஆமாம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் சம்பளம் போடுகின்றார்கள் என்றார் .

ஏன் இப்படிப்பட்ட நிறுவனத்தில் என்னைத் தள்ளிவிட ஆசைப்படுகின்றீர்கள் என்ற போது அவர் யோசிக்காமல் பேசிய வார்த்தை எனக்குச் சிரிப்பை வரவழைத்தது .

நீ சென்றால் மாத சம்பளம் சரியாகப் போடும் அளவுக்கு உன்னால் மொத்த நிர்வாகத்தையும் மாற்றிவிட முடியும் என்றார் .

தொடர்ந்து பேசிய போது அங்கே இருந்த நிர்வாக அமைப்பைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது .

அங்குள்ள நிர்வாக அமைப்பில் ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள் . அங்கே அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் என்பார்கள் . அவர்களைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டால் போதும் . அதன் பிறகு உன்னை அவர்கள் விடவே மாட்டார்கள் . அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் அளி . படபடப்பில் உளறிவிடாதே . அமைதியாக அவர்களைச் சமாளித்து உள்ளே சென்று விடு

நண்பர் என்னிடம் சொல்லியவற்றை வார்த்தையை யோசித்துக் கொண்டே செக்யூரிட்டி மக்கள் எழுதித் தரச் சொன்ன தகவல்களை அவர்கள் கொடுத்த காகிதத்தில் எழுதியபடி நிறுவனத்தின் உள் பகுதியை நோட்டம் விட்டேன் . ஆச்சரியமாக இருந்தது . வெளிப்புற தோற்றத்திற்குச் சம்மந்தம் இல்லாமல் உள்புறம் இருந்தது . தெளிவாக நேர்த்தியாக ஒவ்வொரு பகுதியும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது .

ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தைப் பார்வையிடும் பார்வையிட வரும் வெளிநாட்டு நபர் ( பையர் ) என்னவெல்லாம் எதிர்பார்பாரோ அவையெல்லாம் கனகச்சிதமாக இருந்தது . ஒவ்வொரு இடமும் சுத்தமாக இருந்தது . உள்ளே பணியில் இருந்த பணியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர் . மொத்த நிர்வாகமும் சுகாதாரத்தில் அதிகக் கவனம் செலுத்துவதை உணர்ந்து கொள்ள முடிந்தது .

நிச்சயம் இங்கே உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உருவானது .

செக்யூரிட்டி மக்கள் கேட்ட தகவல்களை எழுதிக் கொடுத்ததும் , நான் வந்த காரணத்தைப் படித்து விட்டு உள்ளே அழைத்துப் பேசினர் . உள்ளே இருந்து அனுமதி கிடைத்ததும் எனக்கு விசிட்டர் பாஸ் என்ற அட்டையை என் கழுத்தில் கட்டிக் கொள்ள அறிவுறுத்தினர் .

ஒருவர் நிறுவனத்தின் வரவேற்பறையை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றார் . நீண்ட சாலை போன்ற பாதையின் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த சிமெண்ட் தளத்தில் நடந்து சென்றேன் . இரண்டு பக்கமும் வெட்டிவிடப்பட்ட அழகுச் செடிகள் . ஒவ்வொன்றையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வரவேற்றையின் உள்பகுதியில் நுழைந்த போது அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது . வரவேற்பரை நீண்ட ஹால் போலவே இருந்தது . தாராளமாக ஒரு மினி கூட்டமே நடத்தலாம் . அந்த அளவுக்கு விசாலமாக இருந்தது . பணச்செழிப்பின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது . நான் வந்துள்ள விபரம் குறித்து உள்ளே தகவல் சென்று இருக்கும் போல . வரவேற்றையில் நடுநாயமாக அமர்ந்திருந்த பெண்மணி என்னைக் கண்டதும் என் பெயர் சொல்லி நீங்க மேலே செல்லாம் என்றார் .

அவரின் உதவியாளர் என்னை மேலே அழைத்துக் கொண்டு சென்றார் . நான் நுழைந்தது முதல் ஒவ்வொரு செயல்பாடும் விரைவாக நடந்து கொண்டிருந்தது . என்னைப் போலவே பலரும் அங்கே காத்துக் கொண்டிருந்தனர் .

எனக்கு அங்கு ஒவ்வொன்றும் ஆச்சரியமாகவே இருந்தது . என்க்கு அங்கே கிடைத்த மரியாதையை விட நண்பருக்கு அந்த நிறுவனத்தில் இருந்த செல்வாக்கைப் பற்றி என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது .

முதல் தளத்தில் உள்ள ஒவ்வொரு தடுப்புகளையும் தாண்டிச் சென்ற போது அங்கேயிருந்த அலுவலகம் சார்ந்த நிர்வாக அமைப்பை புரிந்து கொள்ள முடிந்தது . ஒவ்வொரு பிரிவின் தொடக்கத்திலும் மேலே எழுதி வைக்கப்பட்டிருந்ததை வைத்து ஒவ்வொரு துறையையும் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . அலுவலகம் முழுக்கப் பரவியிருந்த குளிர் என் உடம்பை ஜில்லிட வைத்துக் கொண்டிருந்தது . நடந்து சென்று கொண்டிருந்த போது பக்கவாட்டு பகுதியைப் பார்த்தேன் . சுவற்றின் பாதிப்பகுதியை கண்ணாடி மூலம் தடுக்கப்பட்டு உருவாக்கியிருந்தார்கள் .

கண்ணாடி தடுப்புத் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் இருந்த காரணத்தால் மேலே இருப்பவர்களால் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் கீழ் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தொழிற்சாலையின் மொத்த விஸ்தீரணமும் தெரியும்படி இருந்தது . தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர் . 500 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டே என்னை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த பெண்மணியைத் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன் .

நான் பார்த்த போது மொத்த தொழிற்சாலையும் சுத்தமாகத் தெரிந்தது . மிகக் குறுகிய நேரத்தில் என் மனதில் அங்கே பார்த்த ஒவ்வொன்றையும் வைத்து பல கணக்குகள் போட்டு வைத்துக் கொண்டேன் . என் நண்பர் சொன்ன இந்த நிறுவனத்தின் பலமும் பலவீனமும் புரிந்தது . சுருக்கமாகச் சொன்னால் பில்டிங் ஸ்ட்ராங் . பேஸ்மெண்ட் வீக் என்பதாகக் கற்பனையில் வைத்துக் கொண்டேன் .

நான் நுழைய வேண்டிய அறையைக் காட்டிவிட்டு கூட வந்த பெண்மணி நகர்ந்து சென்று விட்டார் . நான் அந்த அறையின் உள்ளே நுழைவதற்கு முன் மரியாதையின் பொருட்டு லேசாகத் தட்டி விட்டு அறையின் உள்ளே செல்ல அங்கே மற்றொரு உலகம் எனக்கு அறிமுகமானது . அது கலந்துரையாடல் நடக்கும் இடமது . நீண்ட மேஜையும் சுற்றிலும் நாற்காலியும் உயர்தரமான வடிவமைப்பில் உருவாக்கியிருந்தார்கள் . மெல்லிய இசை அந்த அறை முழுக்க ஊடுருவி கொண்டிருந்தது . தேவையான அளவு மட்டுமே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது . ஒரு பக்கத்தில் நான் பார்க்க வந்த ஐந்து பேர்களும் எனக்காகக் காத்திருந்தனர் . அதில் ஒருவர் மட்டும் நாற்பது வயது மதிக்கக்தக்க பெண்மணி . மற்ற அத்தனைபேர்களும் கணவான் கணக்காக இருந்தனர் .

மனதிற்குள் இருந்த தயக்கத்தையும் , உள்ளே ஓடிக் கொண்டிருந்த பலவித யோசனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் சுட்டிக் காட்டிய நாற்காலியில் அமர்ந்தேன் . நான் ஏற்கனவே மின் அஞ்சல் வழியே அனுப்பியிருந்த என் சுயவிபர குறிப்புகளை ஒருவர் மாற்றி ஒருவர் படித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி மனதிற்குள் சிரித்துக் கொண்டே அலர்ட் ஆறுமுகம் போல அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன் . என் சிந்தனைகள் இருகூறாகப் பிரிந்து நின்றது . ஒன்று அவர்களின் யாரோ ஒருவர் திடீரென்று கேள்வி கேட்பார்கள் . நாம் தயாராக இருக்க வேண்டும் . அதே சமயத்தில் அவர்கள் கேட்கும் கேள்விகள் சார்ந்த விசயங்களுக்கு அப்பாற்பட்ட ஆய்த்த ஆடைத் தொழில் சார்ந்த பலவித எண்ணங்கள் என் மனதில் அலையடித்துக் கொண்டிருந்து .

உலகில் உள்ள மற்ற துறைகளை ஒப்பிடும் போது ஆய்த்த ஆடைத் தொழில் என்பது வினோதமானது . திருப்பூருக்குள் முறைப்படுத்த முடியாத நிலையில் தான் இந்தத் தொழில் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கின்றது . மற்ற துறைகள் போல இதன் நிர்வாக அமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் அடக்க முடியாத நிலையில் தான் உள்ளது . மேலைநாடுகளில் உள்ளது போல இந்தத் தொழிலுக்கென்றோ சிஸ்டம் என்பதோ , தீர்மானிக்கப்பட்ட வரையரை என்பதே இன்று வரையிலும் இல்லை . ஆனாலும் எல்லோரும் தொழிலில் இருக்கின்றார்கள் . அதிகப் பணம் வைத்திருப்பவர்களும் , பணம் எதுவுமே இல்லாதவர்களும் கூட இந்தத் தொழிலில் இருக்கத்தான் செய்கின்றார்கள் .

தினசரி ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு 300 ரூபாய் லாபம் சம்பாரித்து இதுவே போதும் என்பவர்களும் சரி , மாதம் ஐந்து கோடிக்கு வரவு செலவு செய்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் . இது ஏன் ? என்பதை விட இது இப்படித்தான் என்று இந்தத் தொழிலில் உள்ள அத்தனை பேர்களும் கடந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றார்கள் .

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நூற்றுக் கணக்கான பேர்கள் காணாமல்போய்விட அடுத்த நபர்கள் உள்ளே வந்து அவர்கள் உழைப்பை கொட்டிக் கொண்டு பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டுருக்கின்றார்கள் . சிலருக்குச் சிக்குகின்றது . பலரோ வலைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள் .

திருப்பூருக்குள் நுழைந்த முதல் பத்து வருடங்களில் நான் கற்ற பலவித அனுபவங்கள் ஏராளமான பாடங்களையும் , படிப்பினைகளையும் தந்த போதிலும் எந்த இடத்திலும் சுய சிந்தனைகளை உபயோகிக்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை . நாம் இருக்கும் பதவி , நமக்கு மேலே இருப்பவர்களின் ஆதிக்கம் இரண்டுக்கும் நடுவே தான் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது . இது தவிரப் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பின் தெளிவற்ற தன்மை என் கூட்டாஞ்சோறு கலவையாக ருசியற்ற தொழில் வாழ்க்கையைத் தான் வாழ வேண்டியதாக இருந்தது . இந்தத் தொழிலில் உள்ள சவால்களைத் தாண்டியும் பல விசயங்களைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்த போதிலும் அதற்காக வாய்ப்பு எனக்கு உருவாகவே இல்லை .

காரணம் எவரும் நமக்கேன் வம்பு ? என்று ஒதுங்கிச் சென்று விடவே தயாராக இருந்தனர் .

முதலாளிக்கு பல பயங்கள் . அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களுக்கே நமக்கென்ன லாபம் ?

இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த ஒவ்வொரு நிர்வாகமும் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்லரித்த மரம் போல எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழ தயாராகவே இருந்தது . அப்படித்தான் திடீரென்று ஒரு விழவும் செய்தது . முதல் வருடம் 50 கோடி வரவு செலவு செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அடுத்த வருடத்தில் வங்கியின் ஏலத்திற்கு வந்த கதையெல்லாம் நிறையப் பார்த்த காரணத்தால் என் மனதில் ஒருவித தேக்க நிலை உருவாகியிருந்தது .

நாம் ஒரு நிர்வாகத்தின் நிறை குறைகளை அலசி அடுத்தக் கட்டத்தைப் பற்றிப் பேச விரும்பினாலும் எவரும் ஆதரிக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் . ” உன் அதிகப்பிரசங்கித்தனம் இங்கே தேவையில்லை ” என்பதாகத்தான் ஒரு வட்டத்திற்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள் .

ஆனால் இங்கே ஒரு கட்டமைப்புக்குள் இருப்பது போலவே இருந்தது . மென்பொருள் துறை போலத் துறை சார்ந்த செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிந்தது . இந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்திய நண்பரும் இதையே தான் என்னிடம் வேறுவிதமாகச் சொல்லியிருந்தார் .

” நமக்குத் திறமை இருக்கிறது என்று நம்புவது தவறில்லை . ஆனால் திறமையை எந்த இடத்தில் எப்படிப் பயன்படுத்துக்கின்றோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியுள்ளது ” என்றார் . அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டே இங்கே நாம் சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என்று யோசித்தபடியே அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன் .

முதல் கேள்வி மனிதவளத்துறை இயக்குநரிடமிருந்து வந்தது .

” உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து தொழிலாளர் நலன் சார்ந்து என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுவீர்கள் ?” என்றார் ,

பதில் சொல்ல வேண்டிய நான் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மற்றொரு கேள்வியை அவரிடமே கேட்டேன் .”

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *