18 17. அவள் பெயர் ரம்யா

17. அவள் பெயர் ரம்யா

அந்தப் பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள் . அதுவொரு பெரிய ஹால் போன்ற அமைப்பில் இருந்தது . பக்கவாட்டில் துணிகளைக் ‘ கட்டிங் ‘ செய்யப் பயன்படும் மேஜைகளும் அதனை ஓட்டி ‘ செக்கிங் ‘ பெண்கள் தங்கள் பணியைச் செய்ய உதவும் தொடர்ச்சியான மேஜைகளும் இருந்தன . பேக்டரி மேனேஜருக்கென்று அந்த ஹாலின் மூலையில் தனியாக ஒரு அறை உருவாக்கப்பட்டு இருந்தது .

அந்த அறையின் உள்ளே நான் இருந்தேன் . அறையைச் சுற்றிலும் இருந்த கண்ணாடி வழியே மொத்த ஹாலில் நடக்கும் வேலைகளைக் கண்காணிக்க முடியும் . பேக்டரி மேனேஜர் பதட்டத்துடன் அறையின் வெளியே நின்று கொண்டிருந்தார் . நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணைக் கண்ணாடி வழியே பார்த்தேன் . எனக்கு அந்தப் பெண் யாரென்று அடையாளம் தெரிந்தது ,

கல்லூரி முடித்த அடுத்த வருடத்தில் திருப்பூர் வந்து சேர்ந்திருந்தார் . திருப்பூர் நிறுவனங்கள் குறித்து எவ்வித அனுபவமும் இல்லை . முன் அனுபவம் குறித்து யோசிக்காமல் ஆர்வத்துடன் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார் .

ஆங்கில இலக்கியத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற அவரின் கனவு சிதைக்கப்பட்டு அவசர கதியில் தகுதியில்லாத நபருக்கு மனைவியாகப் பதினெட்டு வயதிலேயே மாற்றப்பட்டுயிருந்தார் . கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திருமணமும் முடிந்திருந்தது . இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டு கணவருடன் திருப்பூர் வந்து சேர்ந்திருந்த போதும் தனது கல்வி குறித்த ஆசையை மனதிற்குள் பொத்தி வைத்திருந்தார் . பணியில் சேர்ந்திருந்த போதும் அஞ்சல் வழியே தன் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார் .

வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட காரணத்தால் தன்னைச் சுற்றிலும் இருந்த திமிங்கிலம் , சுறாக்களை அடையாளம் காணத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது தான் அலுவலகத்தில் என் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது .

நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த போது பழைய நபராக அலுவலகத்தில் இருந்தார் . நான் நுழைந்த முதல் இரண்டு நாளில் இவர் விடுமுறையில் இருக்க வருகைப் பதிவேட்டில் அவர் பெயரைப் பார்த்து யாரிந்த பெண் ? என்று மற்றவர்களிடம் கேட்ட போது அவர் வகித்துக் கொண்டிருந்த பதவியின் பெயரைச் சொன்னார்கள் . அவர் இந்த நிறுவனத்தில் கோ – ஆர்டினேட்டர் பதவியில் இருந்தார் .

இதுவொரு வித்தியமான ஆனால் சவாலான பதவி . அரசாங்கத்தில் , அரசியல் கட்சிகளில் மக்கள் தொடர்பாளர் என்றொரு பதவி இருக்குமே ? அதைப் போல ஆயத்த ஆடைத் துறையிலும் இது போன்ற சில பதவிகள் உண்டு . இதில் உள்ள ஒவ்வொரு பெரிய துறையையும் ஒருங்கிணைக்கத் தொடர்பாளர்கள் இருப்பார்கள் .

தொழிற்சாலை என்றால் அதற்குத் தலைமைப் பொறுப்பு பேக்டரி மேனேஜர் . அவரிடமிருந்து தான் உற்பத்தி தொடர்பான அனைத்து தகவல்களையும் வாங்க முடியும் . அவரிடம் ஒரே சமயத்தில் பலதுறைகளில் உள்ளவர்கள் அடுத்தடுத்து தொடர்பு கொள்ளும் போது உருவாகும் குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பெண்ணைப் போன்ற தொடர்பாளர்கள் இருப்பார்கள் .

அதாவது தொழிற்சாலையில் ஒரு நாளில் நடக்கும் மொத்த தகவல்களையும் ஒரே நபர் மூலம் திரட்டப்பட்டு அதனடிப்படையில் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் செயல்படுவது . மொத்த நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய தகுதியான பதவியிது . இதற்குப் ” பேக்டரி மெர்சன்டைசர் ” என்றும் அழைப்பர் .

தொழிற்சாலையில் ஒரு நாள் முழுக்க உற்பத்தியாகின்ற ஆயத்த ஆடைகளின் எண்ணிக்கை , அதில் முழுமையடைந்த மற்றும் முழுமையடையாத ஆடைகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும் . இது தவிரத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஷிப்ட் குறித்த விபரங்கள் , விடுமுறை எடுத்தவர்களின் பட்டியல் போன்ற பலவற்றைப் புள்ளி விபரத்தோடு தினந்தோறும் ஒவ்வொன்றையும் தனித்தனி அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும் .

மிகப் பெரிய நிறுவனங்களில் மனித வளத்துறை என்று இதற்கென்று தனியாக ஒரு படை பட்டாளம் இருப்பார்கள் . தொழிலாளர்கள் நலன் சார்ந்த அனைத்து விசயங்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சி போன்ற அனைத்தையும் இந்தத் துறையில் உள்ளவர்களே கவனிப்பார்கள் . ஆனாலும் கோ – ஆர்டினேட்டர் பதவியில் உள்ளவர்களுக்கு எத்தனை தொழிலாளர்கள் அன்றைய தினத்தில் வருகை தந்துள்ளார்கள் என்ற கணக்கு அவசியமாகத் தேவைப்படும் .

கோ – ஆர்டினேட்டர் பொறுப்பில் உள்ளவர்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே தொழிற்சாலையில் உள்ள குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரிபவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு , அவர்கள் கூறிய தகவல்கள் சரியானது தானா ? என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அதனை முதலாளி , மற்றும் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பார்வைக்குக் கணினி வழியே காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் .

இதன் மூலம் ஒரு ஒப்பந்தம் திட்டமிட்டபடி அதன் இலக்கை நோக்கி நகர்கின்றதா ? குறிப்பிட்ட நாளில் கப்பலுக்கு அனுப்பி விட முடியுமா ? போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் . இவர் தினந்தோறும் சமர்பிக்கும் அறிக்கை முக்கியமானது . எல்லாவற்றையும் விடப் பணம் சம்மந்தப்பட்ட காரணத்தால் மிகக் கவனமாகக் கையாள வேண்டும் .

எனவே இந்தப் பொறுப்பில் இருப்பவர்களும் மிக முக்கியமானவர்களாக இருக்க வேண்டும் . அலுவலகம் செயல்படும் நேரம் என்பது தொழிற்சாலை இயங்கும் நேரத்தை விடச் சற்று வித்தியாசமாக இருக்கும் . அலுவலகத்தில் ஒரு கட்டமைப்பு இருக்கும் . ஆனால் தொழிற்சாலையில் அதனை எதிர்பார்க்க முடியாது .

அவசரமென்றால் நள்ளிரவு வரைக்கும் செயல்பட வேண்டியதாக இருக்கும் . சனிக்கிழமை என்றால் அடுத்த நாள் காலை வரைக்கும் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டியதாக இருக்கும் . இது போன்ற சமயங்களில் மனிதாபிமானம் பற்றி யோசித்துக் கொண்டிருக்க முடியாது . முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான பணம் மட்டுமே முதலாளியின் கண்களுக்குத் தெரியும் . முதலாளிக்கு மட்டுமல்ல முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அந்த ஒப்பந்தம் கப்பலுக்குச் சென்று வரைக்கும் தூக்கம் வராது .

காலை வேலையில் அலுவலகம் ஒன்பது மணிக்கு மேலே தான் தொடங்கும் . அதே போல மாலை ஏழு மணிக்கே முடிந்து விடும் . ஆனால் தொழிற்சாலை காலை எட்டரை மணிக்கே தொடங்கி விடும் . இரவு எட்டரை மணி வரைக்கும் இருக்கும் . அலுவலகத்திற்கும் தொழிற்சாலைக்கும் உண்டான நேர வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு மொத்த தகவல்களையும் சேகரித்து விடக் கூடிய கெட்டிக்காரத்தனம் இந்தப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும் . அலுவலகத்தில் மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் தங்கள் பணியைத் தொடங்கியாக வேண்டும் .

மற்றவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் குறுக்குக் கேள்விகள் மூலம் சொல்லப்பட்ட தகவல்கள் சரியானதா ? என்பதை யூகிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் . சேகரித்த தகவல்களை இனம் பிரித்துக் கொள்ள வேண்டும் .

எந்த இடம் பிரச்சனைக்குரியது ? அந்தப் பிரச்சனை எங்கே கொண்டு போய் நிறுத்தும் ? என்பதை அடிக்கோடிட்டு காட்டத் தெரிந்து இருக்க வேண்டும் . தங்கள் நச்சரிப்பைப் பார்த்து ஒவ்வொருவரும் அடையும் எரிச்சலை பொறுத்துக் கொள்ள வேண்டும் . பலருடைய கோபத்தை எதிர் கொண்ட போதிலும் ” என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்று இடைவிடாது அடுத்து என்ன ? என்ற நோக்கத்திலே ஓடிக் கொண்டிருக்க வேண்டும் .

முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் மனோநிலையைப் புரிந்திருக்கக் கூடியவராக இருக்க வேண்டும் . எவருக்குக்கெல்லாம் இந்த அறிக்கை தினந்தோறும் அனுப்பப்படுகின்றதோ அவர்கள் கேட்கும் குறுக்குக் கேள்விகளைச் சமாளிக்கத் தெரிய வேண்டும் . முழுமையாகப் படிக்காமல் குறுக்குக் கேள்விகள் கேட்டுத் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் பிரகஸ்பதிகளைச் சமாளிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் .

முக்கியப் பதவியில் இருப்பவர்கள் பலரும் பல சமயம் அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் இருக்கக்கூடும் . ஆனால் அவசரகதியில் எடுக்கப்பட வேண்டிய அன்றைய பொழுதின் நிர்வாகம் சார்ந்த பல விசயங்கள் அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும் . இது போன்ற சமயத்தில் சமயம் பார்த்து இவற்றைச் சம்மந்தப்பட்டவருக்கு இவரைப் போன்றவர்கள் நினைவூட்டத் தெரிந்திருக்க வேண்டும் .

இதற்கு மேலாகத் தொழிற்சாலையின் செலவீனங்களை ஒப்பிட்டு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளின் எண்ணிக்கை வைத்து நிர்வாகம் திட்டமிட்ட செலவீனத்திற்குள் அடங்குகின்றதா ? இல்லை எகிறிக் குதிக்கின்றதா ? என்பதைப் புள்ளி விபரத்தோடு சுட்டிக் காட்டத் தெரிந்து இருக்க வேண்டும் . அதற்கான காரணத்தை விசாரித்து வைத்திருக்க வேண்டும் . அந்தக் காரணம் உண்மையானது தானா ? என்பது சோதித்துப் பார்த்திருக்க வேண்டும் .

தொழிற்சாலை நிர்வாகத்தில் சில சங்கடங்களும் பல தவிர்க்க முடியாத பிரச்சனைகளும் உண்டு . உள்ளே வந்து பணிபுரிபவர்களுக்குரிய சம்பளம் என்பது வேலை நடந்தால் தான் கொடுக்க வேண்டியதாக இருக்கும் . வேலை இல்லை என்றால் அனுப்பி விடலாம் .

ஆனால் ஒரு தொழிற்சாலையின் நிரந்தரச் செலவீனங்கள் என்பது மின்சாரம் , பெட்ரோல் , டீசல் , தண்ணீர் என்று தொடங்கி ஊழியர்களின் மாதச்சம்பளம் , வாடகை சமாச்சாரங்கள் என்பது தனியாகத் தவிர்க்க முடியாததாக இருக்கும் . தொழிற்சாலை இயங்கினாலும் இயங்காமல் நின்று போயிருந்தாலும் இந்தச் செலவீனங்கள் என்பது மாதந்தோறும் அப்படியே தான் இருக்கும் . ஒரு மாதம் தொழிற்சாலை செயல்படாமல் போனாலும் அடுத்த மாத கணக்கில் இந்தச் செலவீனங்கள் ஏறி நிற்கும் . அடுத்த மாதத்தில் இந்தச் செலவீனங்களைச் சமாளிக்கும் அளவிற்கு அந்த மாத உற்பத்தியை அதிகப்படுத்தியாக வேண்டும் .

ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒரு லட்சம் ஆடைகள் உற்பத்தி ஆகின்றது என்றால் அதற்கான அடிப்படை செலவீனங்கள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப் படுகின்றது என்பதை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் . உற்பத்திக்கான செலவு . உற்பத்தி செய்வதற்கான மற்ற செலவு .

உற்பத்திக்கான செலவில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஷிப்ட் சம்பளம் வந்து விடும் . உற்பத்திக்கான மற்ற செலவில் மேலே குறிப்பிட்ட பல செலவீனங்கள் வந்து சேர்ந்து விடும் . இது தவிர ஒரு ஆடை உருவாக்கத்திற்குத் தேவைப்படும் துணிக்கான செலவு முதல் கப்பல் வரைக்கும் கொண்டு சேர்க்கக் கூடிய செலவு வரைக்கும் அடக்கும் போது பல லட்சங்கள் தினந்தோறும் கரைந்து கொண்டேயிருக்கும் .

” கரணம் தப்பினால் மரணம் ” என்பார்களே ? அதைப் போலத்தான் தொழிற்சாலை வைத்து நடத்தும் காரியம் . இவை அனைத்தும் ஒரு அறிக்கை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் அந்த அறிக்கையைத் தயாரிப்பவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் ?

நன்றாகப் பேசத் தெரிந்து இருக்க வேண்டும் . சமயோஜிதப் புத்தியுள்ளவராக இருக்க வேண்டும் . மொத்தத்தில் கடுமையான உழைப்புடன் கூடிய அர்பணிப்பு உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் .

இந்த நிறுவனத்தில் நான் நுழைந்த இரண்டாவது நாளில் இவரைச் சந்தித்தேன் . இவரை மற்றொருவர் திட்டிக் கொண்டிருந்தார் . இவர் தலையைக் குனிந்தபடி அழுது கொண்டிருந்தார் . காரணம் ஒரு நாள் விடுமுறை கேட்டுச் சென்றவர் மூன்று நாள் கழித்து வந்த காரணத்தால் பாதி வேலைகள் முடியாத காரணத்தை வைத்துக் கொண்டு ” நீ வீட்டுக்குப் போ ?” என்று பேசிக் கொண்டிருந்தார் . சப்தம் அதிகமாகக் கேட்க நான் இவர் இருந்த இருக்கைக்குச் சென்று ” என்ன பிரச்சனை ?” என்று கேட்டேன் .

அவரிடம் விபரங்களை முழுமையாகக் கேட்டதும் ” இப்படித்தான் இங்கே ஒவ்வொருவிதமாக இருப்பார்கள் . எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் . இனியாவது சரியாக நடந்து கொள் ” என்று சொல்லிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன் .

அன்று நான் எதார்த்தமாகச் சொல்லிய ஆறுதல் வார்த்தைகள் இவர் மனதில் மிகப் பெரிய நம்பிக்கை அளித்திருந்ததை அடுத்தச் சில வாரங்களில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . சில தினங்களில் அவரை நான் என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன் . அவர் தகுதிக்குரிய ஒவ்வொரு வேலையாகப் பிரித்துக் கொடுத்து ஒரு வேலையை எப்படித் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கச் சொன்னபடியே சில வாரங்களில் அவரிடமிருந்த ஒவ்வொரு திறமையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் துவங்கியது .

எந்தத்துறை என்றாலும் பயிற்சி முக்கியம் . இங்கே எல்லோரிடமும் அளவிட முடியாத ஏதோவொரு திறமை இருக்கக்தான் செய்கின்றது . சிலரால் அதனை இயல்பான பழக்க வழக்கத்தில் வெளிக்கொண்டுவர முடிகின்றது . பலருக்கும் தன்னிடம் என்ன திறமை உள்ளது ? என்பதை அறியாமலேயே ” கண்டதே காட்சி வாழ்வதே வாழ்க்கை ” என்று வாழ்ந்து முடித்து இறந்து போய் விடுகின்றார்கள் .

வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் என்பது தனக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும் . இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லுகின்றார்கள் . சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர் . எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை . என் குடும்பம் சரியில்லை . என்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை . என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று எத்தனையோ காரணங்களைத் தங்களின் தோல்விக்காகச் சுட்டிக் காட்டுகின்றார்களோ ஒழிய தன் திறமை தன் உழைப்பு குறித்து எவரும் யோசிப்பதே இல்லை .

சிலருக்கு கிடைக்கக்கூடிய அறிமுகம் தான் அவர்களின் வாழ்க்கையின் புதிய பாதையை உருவாக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது . அதன் பிறகே மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகின்றது . இந்தப் பெண்ணை முதல் முறையாகச் சந்தித்த போது இவர் குறித்து எவ்வித தனிப்பட்ட அபிப்ராயங்கள் எதுவும் எனக்கில்லை . ஆனால் ஒருவரிடமிருக்கும் நிறை குறைகளை அலசி அவரை எந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன் . இவரை மட்டுமல்ல இவரைப் போன்ற உள்ளே பணிபுரிந்த ஒவ்வொருவர் மேல் தனிக்கவனம் செலுத்தினேன் .

இவரின் தனிப்பட்ட ஆர்வமும் உழைப்பும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது . என்னருகே கொண்டு வந்து நிறுத்தியது . ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல . அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை . அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி .

சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி , பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல . அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும் .

பெருமையும் சிறுமையும் கடைசியில் சம்மந்தப்பட்டவர்களுக்கே வந்து சேர்கின்றது . பெரிய நிறுவனங்களில் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் மூளையாகப் பலரும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே அவர் சரியான நிர்வாகி என்ற பெயர் எடுக்க முடிகின்றது . எனக்கும் அப்பேற்பட்ட பெருமை பல இடங்களில் கிடைத்தது . அப்படிக் கிடைக்கக் காரணம் இது போன்ற பெண்களும் ஆண்களும் பலவிதங்களில் உதவியுள்ளனர் . என் வெறுப்பு விருப்புகளைப் புரிந்து நடந்துள்ளனர் . பல பலவீனங்களை அனுசரித்து நடந்துள்ளனர் . நான் விரும்பிய ஒழுக்க விதிகளை அலுவலகத்திற்குள் கடைபிடித்துள்ளனர் . அவர்கள் கேட்ட வசதிகளை விருப்பங்களை மறுக்காமல் செய்து கொடுத்துள்ளேன் .

கொடுக்கும் போது தான் எதையும் பெற முடியும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தேன் . நான் ஒவ்வொரு முறையும் கொடுத்த போது பலவிதங்களில் வேறு வடிவங்களில் என்னைத் தேடி வந்தது . எனக்காகத் தேடிக் கொடுத்தவர்கள் எப்போதும் போல என்னை விடப் பலபடிகள் கீழே தான் இருந்தார்கள் . ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் , உருவான வளர்ச்சியின் மூலம் கிடைத்த மரியாதையை அவர்களுக்கும் சேர்ந்து சமர்ப்பித்தேன் . அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது .

இங்கே ஒவ்வொருவரும் அங்கீகாரத்தைத் தான் முதன்மையாக எதிர்பார்க்கின்றார்கள் . ஆறுதல் வார்த்தைகளைத் தான் அதிகமாக விரும்பு கின்றார்கள் . ஆனால் இங்கே ஒவ்வொரு மனிதனும் குப்பைகளைத் தான் தங்கள் மனதில் நிரப்பி வைத்துள்ளனர் . வக்கிரத்தை தாங்கள் அணியும் ஆடைகள் போல வைத்துள்ளனர் .

சக மனிதர்களிடம் இயல்பான வார்த்தைகளைக் கூட உச்சரிக்க மனசில்லாமல் வக்கிரத்தை வெளிக்காட்ட திரும்ப வந்து தாக்குகின்றது . இதன் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் மனித உறவுகள் பாழ்படுகின்றது . இந்த விசயத்தில் மிகக் கவனமாக இருந்தேன் . இந்தப் பெண்ணிடமும் அப்படித்தான் நடந்து கொண்டேன் . நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த இரண்டாவது வாரத்தில் ஒரு கோரிக்கையுடன் என்னை வந்து சந்தித்தார் .

” என் வீடு நம் பேக்டரிக்கு அருகே உள்ளது . இங்கே இருந்து மூன்று பேரூந்து மாறி தினந்தோறும் வீட்டுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது . இதனால் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகின்றது . ஏற்கனவே உங்கள் பதவியில் இருந்தவரிடம் சொல்லியபோது உதவத் தயாராக இல்லை . நீங்களாவது எனக்கு உதவ வேண்டும் ” என்று பேசிய போது முழுமையாக அவரைக் கவனித்தேன் . ரசிக்கக்கூடிய வகையில் இருந்தார் .

ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஆண்களை விடப் பெண்களை மட்டும் தான் பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதுகின்றார்கள் . நாம் காணும் திரைப்படங்களில் தொடங்கிச் சாதாரண விளம்பரம் வரைக்கும் பெண்களை அறிமுகப்படுத்தும் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காமத்தின் குறியீடாகத்தான் காட்சிப்படுத்துகின்றார்கள் .

ஒவ்வொரு நிமிடமும் ஆணுக்கு கிளர்ச்சியை உருவாக்குவதற்காகவே பெண்களைப் படைத்தது போல நம் முன்னால் பெண்கள் என்ற உருவத்தை உருவகப் படுத்துகின்றார்கள் .

எல்லா உயிரனங்களுக்கும் இனப்பெருக்கம் என்பது அதுவொரு இயல்பான விசயம் . காலம் மாறியதும் , தக்க பருவத்தில் துணையுடன் கூடி அதன் கடமையை முடித்து விட்டுச் சென்று விடுகின்றது . ஆனால் மனித இனத்தில் மட்டும் தான் இனப்பெருக்க உறுப்புகளை வைத்து காசு பெருக்கும் கலையை உருவாக்கியுள்ளனர் . காரியம் சாதிக்க உதவுவதாக மாற்றியுள்ளனர் . குறிப்பாகப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ தங்களை உணர்ந்து கொள்ள வழியில்லாமல் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளச் செய்யக் கூடிய காரியங்களில் கவனம் செலுத்துக் கின்றார்கள் . அவர்களின் அதிகப்படியான ஆர்வம் அவர்களுக்கு இறுதியில் அவஸ்த்தைகளைத் தான் கொண்டு வந்து சேர்க்கின்றது .

இன்று இது போன்ற அவஸ்த்தையில் தான் இந்தப் பெண்ணும் சிக்கியுள்ளார் . அன்று அலுவகத்தில் என்னிடம் கேட்ட இவர் கோரிக்கையை நிறைவேற்றியது தவறோ ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன் .

என் தனிப்பட்ட பயிற்சியின் காரணமாகத் தொழிற்சாலையில் இவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்பினேன் . குடும்ப ரீதியான பிரச்சனைகள் இல்லாதபட்சத்தில் இவரின் தனித்திறமை இன்னமும் மேம்படும் என்ற கணக்கில் அவருக்கு உதவினேன் . அது பல விதங்களில் சிக்கலை உருவாக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை .

இந்தப் பெண்ணின் கதையும் இப்படித் தான் தொடங்கியுள்ளது . வெகுளி என்பதற்கு எப்படி அர்த்தம் சொல்வீர்களோ ? எனக்குத் தெரியாது . ஆனால் இந்தப் பெண் வெகுளித்தனத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்தது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார் . வாளிப்பான உடம்பும் , வசீகரிக்கக்கூடிய அமைப்புகளும் ஒன்று சேர வேறென்ன வேண்டும் ? இருபது வயதிற்குள் திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கின்றான் என்றால் எவரும் நம்பமாட்டார்கள் . ஒரு முறை பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டும் அளவெடுத்த உடம்பு .

தான் விரும்பும் நவநாகரிக உடைகளைத் தினந்தோறும் அணிந்து வருவதால் வாளிப்பான பருவத்தைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தகுந்தபடி ரசிக்கும்படி இருந்துள்ளார் . இதற்கு மேலாகப் பலருடனும் பேசியாகவேண்டிய சூழ்நிலையில் இருந்த காரணத்தால் பேசிய ஒவ்வொருவரும் இவர் பேசி முடித்துச் சென்றதும் தனது வக்கிர எண்ணத்தை வடிகாலாக மாற்றிவிட அது ஒவ்வொரு இடமாகப் பரவி உள்ளது . அதுவே இவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துக் கணவன் காதுக்குச் செல்ல அது குடும்ப ரீதியான பிரச்சனையை உருவாக்கி உள்ளது .

இவரின் நடத்தையைக் கேள்விக்குறியாகக் கேலிக்குறியதாக மாற்றியுள்ளது . இந்தப் பெண்ணின் குற்றமல்ல . ஆசைப்பட்டவர்களின் எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் உருவான ஆதங்கத்தின் விளைவு இது .

இதுவே தான் தொழிற்சாலையில் பணிபுரிந்த பலருக்கும் குறுகுறுப்பை உருவாக்கி கணவன் வரைக்கும் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது . ” என் மனைவியை எப்படி நீ தப்பாகப் பேசலாம் ?” என்கிற அளவுக்குப் பிரச்சனை திசைமாறி கணவனைப் பலருடனும் தொழிற் சாலையின் உள்ளே வந்து சண்டை போட வைத்துள்ளது .

கடந்த சில வாரங்களாகத் தொழிற்சாலைக்கு வெளியே நடந்து கொண்டிருந்ததைப் பேக்டரி மேனேஜர் உணரத் தவறியதால் ஒருவர் மற்றொருவரை கூட்டணி சேர்ந்து கணவனைத் தாக்க அது தீப்பொறி போலப் பரவியுள்ளது . கணவன் தரப்பில் பல ஆட்கள் சேர ஒன்றோடு ஒன்று சேர்ந்து இன்று தொழிற்சாலையே நிற்கும் அளவிற்குப் போயுள்ளது .

இங்கே காலங்காலமாகப் பெண்களை வீட்டுக்குள் மட்டும் அழகு பார்த்த சமூகமிது . பெண்களுக்க வீட்டு வாசல் தான் எல்லைக்கோடாக இருந்தது . ஆனால் இன்று காலமும் சூழலும் மாறி விட்டது . நவீன தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கின்றது . ஒவ்வொரு வசதியையும் தானும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது . அதுவே ஆசைகளை வளர்க்கின்றது . இதற்காகவே வாழ வேண்டும் என்றை அக்கறையை உருவாக்குகின்றது . பணம் குறித்த ஆசையை , எண்ணத்தை மேம்படுத்துகின்றது . எத்தனை எண்ணங்கள் மாறினாலும் பெண்கள் குறித்த எண்ணங்கள் மட்டும் இங்கே எவரிடமும் மாறவில்லை .

ஆண்கள் எத்தனை பேர்களிடத்திலும் பேசினாலும் குற்றமில்லை . எந்த இடத்தில் வைத்து பேசிய போதும் அவர் தரப்பு நியாயங்களைத்தான் இந்தச் சமூகம் வசதியாக எடுத்து வைக்கின்றது . ஆனால் ஒரு பெண் கடைகளில் , அலுவலகத்தில் , தொழிற்சாலையில் பணியாற்றினாலும் பெண் ஒருவருடன் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக நின்று பேசிக் கொண்டிருந்தால் அதன் மீது தப்பான அர்த்தம் தான் கற்பிக்கப்படுகின்றது .

இது போன்ற தப்பிதங்கள் இவரைச் சிங்கக்கூட்டத்திற்குள் சிக்கிய புள்ளிமான் போலத் தடுமாற வைத்துள்ளது . முழுமையாக அந்தப் பெண் தரப்பு நியாயங்களைக் கேட்டு முடித்த பின்பு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன் .

” ஏனம்மா இப்படி ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி விட்டாய் ? எனக்குக் கொடுத்த பரிசா இது ?” என்றேன் ,

அதற்கு அவர் தந்த பதில் என்னைத் திடுக்கிட வைத்தது .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *