17

16 எந்திர மனிதர்கள்

என் வாகனம் தொழிற்சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது . எனக்குள் இனம் புரியாத கவலை இருந்தது . ஒரு நிறுவனத்தின் இதயம் , மூளை என்பது தொழிற்சாலை மட்டுமே . ஒருவர் எத்தகைய திறமைசாலியாக வேண்டுமானாலும் இருக்கலாம் . அசாத்தியமான திட்டங்களைக் கூடத் தீட்டலாம் . ஆனால் அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பதில் தான் அவரின் நிர்வாகத்திறமை உள்ளது . நிர்வாகத்தில் காரணங்கள் சொல்ல முடியாது . செய்த காரியங்கள் தான் நம்மைப் பற்றிப் பேசும் .

உற்பத்தி தடையில்லாமல் நடக்க வேண்டும் . உற்பத்தியான பொருட்கள் வெளியே தொடர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும் . சென்ற பொருட்களில் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது . இது சுழற்சி போலத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் . இப்படி நடக்கும் பட்சத்தில் தான் அலுவலகப் பணியென்பது அமைதியாக இருக்கும் . தடம் தவறினால் தடுமாற்றம் உருவாகும் என்பது இயல்பு தானே ?

எனக்கும் நம்பிக்கை பூ பூத்திருந்தது . நாம் கடந்த மாதங்களில் உழைத்த உழைப்பு வீணாகவில்லை என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது . இனி காய் , கனி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன் . பல படிகள் ஏறிவிட்டோம் . இனி பயணம் சுகமாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன் . இதோ இன்று தொழிற்சாலை நின்று போகும் அளவுக்கு ஏதோவொரு பிரச்சனை .

ஆய்த்த ஆடைத் துறை மட்டுமல்ல நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் அலுவலக நடைமுறைகள் என்பதும் தொழிற்சாலை என்பதும் முற்றிலும் வேறாக இருக்கும் . வெவ்வேறு முகங்கள் கொண்ட இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தேன் . அதிகப் படியான மனஉளைச்சல் இருந்தது . ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது . கற்றதன் வழியே பல பாடங்கள் புரியத் தொடங்கியது .

பணம் படைத்தவர்களின் திருவிளையாடல் ஒரு பக்கம் . அன்றாடங் காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கை ஒரு பக்கம் . இரண்டும் வெவ்வேறு கோணங்கள் . ஒன்றில் மனிதாபிமானம் என்பதே இருக்காது . மற்றதில் மனிதாபிமானம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும் . ஒன்றில் அந்தஸ்து என்பதற்காக எவ்வித கேவலத்தைப் பொருட்படுத்த தேவையிருக்காது . மற்றொன்றில் மானம் பெரிதென வாழும் கூட்டமாக இருக்கும் . இந்த இரண்டு பிரிவைப் போல அலுவலகப் பணியாளர்களும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உலகமும் வெவ்வேறாக இருக்கும் .

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பேசப் பழக நிறைய வாய்ப்புண்டு . பல சமயம் சிந்திக்க நேரம் இருப்பதுண்டு . ஆனால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இயந்திரங்களுடன் தான் தினந்தோறும் உறவாட வேண்டும் . மனிதத் தொடர்பு என்பது குறுகிய நேரம் மட்டுமே . குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தாக வேண்டும் . தங்களது எண்ணம் , ஏக்கம் , சோகம் அனைத்தையும் உள்ளுக்குள்ளே பூட்டி வைத்திருக்கப் பழகியிருக்க வேண்டும் . எந்தவொரு தனியார் நிர்வாகத்திலும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் குறைந்த அளவில் தான் வாசித்திருக்க முடியும் . ஆனால் செய்தித்தாளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அன்றாடச் செய்தியாகவே வந்து கொண்டிருக்கும் . காரணம் தொழிலாளர்களின் மன உளைச்சல் என்பது எழுத்தில் எழுதி புரிய வைக்க முடியாத ஒன்று . திடீரென வெடித்துக் கிளம்பும் போது அது அடங்க நேரம் காலமாகும் . இப்படித்தான் பலவற்றையும் யோசித்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு வாகனத்தை நகர்த்திக் கொண்டிருந்தேன் .

நாங்கள் சென்று கொண்ருந்த வாகனம் போக்கு வரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்தது . திருப்பூரின் முக்கியச் சாலையின் வழியே செல்லும் போது போக்குவரத்து நெரிசலைக் கடந்து நாம் நினைக்கும் இடத்திற்குச் செல்ல கூடுதல் நேரம் வேண்டும் . ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது என்னைப் போன்றவர்களுக்கு அலுப்பைத் தரக்கூடியது . இடைவிடாத அலைபேசி தொடர்புகள் ஒருபுறம் . மற்றொரு புறம் பயணங்கள் பாதிநேரத்தை விழுங்கி விடும் அச்சமும் சேர்ந்து மன உளைச்சலை உருவாக்கும் . நாம் அன்றைய பொழுதில் செய்ய வேண்டிய முக்கியக் காரியங்கள் என்று பட்டியலிட்டு வந்தவற்றைச் செய்ய முடியாமல் போய்விடும் . உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் அலைவது என்பது மனிதர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் . வயதாக உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பழக்கமும் பல காத தூரம் விலகிக் கொள்ளத் தொடங்கும் .

என்னுடன் பயணித்த பேக்டரி மேனேஜர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் . எதிரே இருப்பவர் தாம் பேசுவதை விரும்புகின்றாரா ? இல்லையா ? என்பதை உணராமல் பேசிக் கொண்டே இருக்கும் நபர்கள் பெரிய இடைஞ்சலாக மாறி விடுவார்கள் . ஆனால் அவர் பதட்டத்துடன் இருந்தார் . தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ ? என்ற அச்சத்தில் இருந்தார் .

எந்தவொரு தனியார் துறையிலும் முக்கியப் பதவியில் தொடர்ந்து இருப்பது கடினமே . அதிலும் அந்தப் பதவியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் . உழைப்பு மட்டுமே போதாது . மனிதர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் . இடம் , பொருள் , ஏவல் பார்த்து ஒவ்வொரு நிமிடமும் தம்மைச் சோர்வில்லாது புதுப்பித்துக் கொள்ளப் பழகியிருக்க வேண்டும் .

உணர்ச்சிகளை உள்ளடக்கி வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும் . எதற்காகச் சீறுவார் ? எப்போது சிரிப்பார் ? என்று எதிரே இருப்பவர் உணர முடியாத நிலையில் இறுக்கமாக வாழப் பழகியிருக்க வேண்டும் . இதற்கெல்லாம் மேலாக எத்தனை துரோகங்களைச் சந்தித்து இருந்த போதிலும் மனிதர்களின் மேல் நம்பிக்கை வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும் . இவரிடம் மனிதாபிமானம் உண்டு என்ற நம்பிக்கையை மற்றவர்கள் மனதில் உருவாக்கத் தெரிந்துருக்க வேண்டும் .

முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் உண்மையான திறமையை நெருக்கடியான சூழ்நிலை தான் உணர்த்தும் . அதுபோன்ற சமயங்களில் அவர்கள் அந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்கின்றார்கள் என்பதில் இருந்து தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும் . பேக்ட்ரி மேனேஜர் பயந்து போயிருந்தார் . என் குணத்தை நன்றாகப் புரிந்தவர் . ஒருவருக்குக் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதி இல்லை என்றால் என் ஆதரவு இருக்காது என்பதை நன்றாக உணர்ந்தவர் . நாகரீகமாக அந்தப் பதவியில் இருந்து நகர்த்தி விடுவேன் என்பதை உணர்ந்த காரணத்தினால் அவர் அவசரமாக எல்லாவற்றையும் பேசிக் கொண்டே வந்தார் . குறிப்பாக அவர் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பு , படும்பாடுகள் , அவரின் விசுவாசத்தின் எல்லை என்பதனை அடுக்கிக் கொண்டே வந்தவர் என் திறமைகளைப் புகழத் தொடங்கினார் . என் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் .

என்னைப்பற்றி என்னிடமே பேசத் தொடங்கும் போது சுதாரித்துக் கொண்டேன் . பேச்சை வேறு பக்கம் திருப்பி விட்டுத் தூரத்தில் கவனித்தேன் . தொழிற்சாலை கண்களுக்குத் தெரியும் அளவில் நெருங்கிக் கொண்டிருந்தோம் . தொழிற்சாலையின் வாசலில் ஒரு பெரும் கும்பல் கூடியிருந்ததைக் கவனிக்க முடிந்தது . என் மனதிற்குள் இனம் புரியா கோபம் எட்டிப் பார்த்தது . என் கோபம் பேக்ட்ரி மேனேஜர் மேல் திரும்பியது .

” நீங்க ஒரு மணி நேரம் வெளியே வந்து திரும்பி போவதற்குள் தொழிற்சாலை உங்க கட்டுப்பாட்டுக்குள் இல்லை . நீங்க எப்படி நிர்வாகம் செய்றீங்கன்னு எனக்கு நன்றாகப் புரிகிறது என்றேன் ? “

அவருக்கு என் கோபம் புரிந்து விட்டது . அவரும் தொழிற்சாலையின் வாசலை கவனித்துப் பதட்டமானார் .

ஒரு நாட்டுக்குள் நுழைபவருக்கும் அந்த நாட்டின் தகுதி என்பது விமான நிலையத்திலேயே தெரிந்து விடும் . அங்குள்ள நடைமுறைகளை வைத்தே மொத்த நாட்டின் தகுதியை எடை போட்டு விட முடியும் . அங்கே கிடைக்கும் வரவேற்பு வைத்தே அரசாங்கத்தின் நிர்வாகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் . வந்து இறங்கியவனிடம் முடிந்தவரைக்கும் கறந்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட அதிகாரிகள் மூலம் மொத்த அரசு சார்ந்த துறையின் அவலட்சணத்தைப் புரிந்து கொள்ள முடியும் .

இதைப் போல ஒரு தொழிற்சாலையின் கட்டுப்பாடு என்பது நுழைவாயில் காட்டிக் கொடுத்து விடும் . முகப்பில் இருப்பவர்களின் நேர்மையான எண்ணங்களும் , பிடிவாதமான ஒழுக்கமும் தான் உள்ளே பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குணாதிசியத்தை நமக்குப் புரிய வைக்கும் . ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான தீவு . ஆனால் ஒரு இடத்தில் அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரே நிலையில் கொண்டு வருவதென்பது சாதாரணக் காரியமல்ல .

தனியாக இருக்கும் வரைக்கும் வரை அவன் ஒரு தனி மனிதன் . அதுவே மொத்த கூட்டத்தில் சேர்ந்து வேண்டாத வேலைகள் செய்யத் தொடங்கும் போது அவன் மனதளவில் மிருகமாக மாறிவிடுகின்றான் . சட்டம் ஒழுங்குக்குச் சவால் விடுக்கத் தொடங்குகின்றான் . இந்தக் கூட்டத்தைச் செக்யூரிட்டிகளுக்குக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் . எங்கே தட்டினால் எப்படி மொத்தக் கூட்டமும் கலையும் என்பதை உணர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும் .

ஒவ்வொரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் செக்யூரிட்டிகள் என்றழைக்கப்படும் காவல் கூட்டம் என்பது தனியுலகம் . தொடக்கத்தில் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் யாரோ ஒரு வயதான பெரியவரை அதுவும் சொந்தக்காரர் என்ற தகுதி படைத்தவரை பெயருக்கென்று வாசலில் அமர வைத்திருப்பார்கள் . நாள் முழுக்க அவர் வாசலில் உட்கார்ந்திருப்பது மட்டுமே வேலையாக இருக்கும் .

ஆனால் இன்று இதற்காகத் தனிப்பட்ட செக்யூரிட்டி ஏஜென்சி வரைக்கும் இந்தத் துறையில் தற்போது வளர்ந்து கொடி கட்டி பறக்கின்றார்கள் . சீருடைகள் அணிந்து , அதிரடி விரைவுப் படையினர் போலப் பல பெரிய நிறுவனங்களில் அசாத்தியமான திறமை சாலிகளுடன் பணிபுரிகின்றார்கள் .

ஒரு நிறுவனத்தின் காவல் சார்ந்த அனைத்து பிரிவுகளையும் பார்க்கின்றார்கள் . நானும் இதைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த போது முதலாளி மறுத்து விட்டார் . காரணம் மாதம் இதற்காக 50000 ரூபாய்ச் செலவாகும் என்ற நிலையில் இருந்தது . காசுக்கேத்த பணியாரம் என்பது போல வேறு சிலரை ஏற்பாடு செய்து இருந்தேன் . நிர்வாகத்தின் ஒவ்வொரு இடத்திலும் காவல் கூட்டத்தைப் பணியில் அமர்த்திருந்தேன் .

முதலுக்கு மோசமில்லை என்கிற நிலையில் தான் இருந்தார்கள் . ஆனால் இன்றோ நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க வேண்டியதாக உள்ளது .

பல படிகள் ஏறிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது . ஒரே இடத்தில் இருந்து கொண்டு மொத்த நிர்வாகத்தையும் நடத்தி விடலாம் . அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுவோம் என்ற எண்ணத்தில் பெரிய அடி விழுந்தது போல இருந்தது .

என் வாகனத்தின் சப்தத்தை உணர்ந்து கொண்டவர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு உருவாகி கூடியிருந்தவர்கள் பக்கவாட்டில் ஒதுங்கத் தொடங்கினர் . என் வாகனம் உள்ளே நுழைந்த போது ஏற்றியிருந்த கண்ணாடி வழியே அங்கே நின்று கொண்டிருந்த நபர்களை உற்றுக் கவனித்தபடியே பேக்டரி மேனேஜரை அங்கேயே இறக்கி விட்டு உள்ளே என் அறைக்குச் சென்றேன் . கூடவே தலைமைப் பொறுப்பில் இருந்த செக்யூரிட்டியை என் அறைக்கு வரச் சொல்லியிருந்தேன் .

அவரிடம் விசாரித்து முடித்து விட்டு எனக்கு நம்பிக்கைக்கு உகந்த சிலரை வரவழைத்து விசாரித்தேன் . இது தவிரக் குறிப்பிட்ட செய்யூரிட்டியை மட்டும் என் அறைக்கு வரச் சொல்லி மொத்த விபரங்களையும் விசாரித்த போது பேக்டரி மேனேஜர் சொன்ன தகவல்களுக்கு மாறானதாக இருந்தது .

கடைசியாகச் சம்மந்தப்பட்ட பெண்ணை என் அறைக்கு வரவழைத்தேன் . அந்தத் தேவதையின் தரிசனம் எனக்குக் கிடைத்தது .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book