14 13. வேலையைக் காதலி

13. வேலையைக் காதலி

முதல் மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் சவாலாகவே கழிந்தது . கடுமையான வேலைப்பளூ என்பதை விடத் தூக்கம் மறந்து இருபத்தி நான்கு மணி நேரமும் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையிலே இருக்க வேண்டியதாக இருந்தது . வீட்டுக்கு வந்தாலும் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை குறித்தே நினைப்பில் இருக்க உடம்பு படுத்த ஆரம்பித்தது . ஆனாலும் இந்த வேலையை ரொம்பவும் நேசித்தேன் .

நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும் . நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்குச் சோர்வு வருவதில்லை . அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும் . அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும் . அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது .

வேலை என்பதைச் சம்பளம் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சானை தீட்டப்படாத கத்தியை வைத்து நறுக்குவது போலத்தான் இருக்கும் . நான் ஏற்றுக் கொண்ட பணியை அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவே பார்த்து வந்தேன் . இதன் மூலம் கிடைக்கக்கூடிய அனுபவம் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பினேன் .

மதம் சார்ந்த விருப்பங்கள் , கடவுள் மயக்கம் , அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி போன்றவற்றைக் கடந்து வந்து விட்ட காரணத்தால் இது விதி சார்ந்தது என்று யோசிக்கவில்லை .

எவரை நோக்கியும் என் ஆள்காட்டி விரல் நீட்டப்படவே வில்லை . ” தீதும் நன்றம் பிறர் தர வரா ” என்பதைப் போல ” எண்ணம் போல வாழ்வு ” என்பதையும் கொள்கையாக வைத்திருந்தேன் . நிறுவனத்திற்குள் இருந்த ஒவ்வொருவரும் தெரிந்தே செய்த தவறுகளையும் , அறியாமல் செய்த பிழைகளையும் மன்னிக்கத் தயாராக இருந்தேன் . இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை அமைதியாக உள்வாங்கிக் கொண்டேன் . தெளிவாக இனம் பிரித்துக் கொண்டேன் . அவரவர் தகுதி குறித்தே எண்ணங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து வைத்திருந்தேன் .

எவரிடம் உண்மையான உழைப்பு இருக்கின்றது என்பதை விட எவர் உழைப்பது போல நடிக்கின்றார்கள் என்பதையும் கண்டு கொள்ள முடிந்ததால் எவர் மீதும் எரிச்சல்படாமல் தகுதியில்லாதவர்களை ஒதுக்கத் தொடங்கினேன் . சிலர் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்டார்கள் . பலர் இது தான் வாய்ப்பு என்று மேலும் நடிக்கத் தொடங்கினார்கள் . இது தான் எனக்கு வாய்ப்பாக இருந்தது . நடிப்பவர்களை எடுபிடியாகப் பயன்படுத்த தொடங்க தாமதமாகப் புரிந்து கொண்டு கதறத் தொடங்கினார்கள் .

காலையிலேயே திட்டமிட்டு வந்திருந்தேன் . தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன் . அலுவலகம் என்ற பெயரில் மேஜைகள் நாற்காலிகள் இருந்ததே தவிர அங்கங்கே இருந்து செயல்பட வேண்டிய ஆட்கள் இல்லை . முதலில் அலுவலகம் சார்ந்த நபர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன் .

விளம்பரத்தின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பல பாதக அம்சங்களைத் தரக்கூடும் என்பதால் என் பழைய தொடர்பில் இருந்த தகுதியான நபர்களை நினைவில் வைத்து பேசினேன் . வருகின்றவர்களுக்குத் தொழில் அறிவு எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட எதைக்கண்டும் பின்வாங்காத குணம் இருக்க வேண்டும் என்பதை வருகின்றவர்களின் அடையாளமாக வைத்திருந்தேன் . உழைப்பாளியாக இருந்தால் மட்டும் போதும் என்று கூட நினைத்திருந்தேன் .

உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது . அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும் . வேலையில்லாதவர்களுக்கும் , வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போலச் செயல்படும் . பழிவாங்குதல் , கடமைகளில் இருந்து தப்பித்தல் , காரணம் சொல்லுதல் , காரணங்களைத் தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கித் தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும் .

ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடையப் பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களைக் கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும் .

நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது . இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது . அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது . ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது . அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன் . அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன் .

என் உழைப்பு மட்டும் இங்கே முக்கியமல்ல . என் சிந்தனையைப் போன்று ஒத்த நோக்கம் கொண்டவர்களையும் உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே என் பாரம் குறையும் என்று பாரம் சுமக்கத் தயாராக இருப்பவர்களைத் தேடத் துவஙகினேன் .

ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலைக்கு முக்கியமான சில நபர்கள் தேவை . முதலில் மார்க்கெட்டிங் என்ற துறையில் கவனம் செலுத்த வேண்டும் . நிர்வாகத்திற்குத் தேவைப்படுகின்ற ஒப்பந்தங்களைக் கொண்டு வரக் கூடியவராக இருக்க வேண்டும் .

ஏற்றுமதி ஒப்பந்தங்கள் திருப்பூர் சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்து வரலாம் . அல்லது நேரிடையாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரலாம் . நம் திறமையைப் பொறுத்து ஒப்பந்தங்களை உள்ளே கொண்டு வர முடியும் . இதற்கு மார்க்கெட்டிங் மேனேஜர் என்றொரு பதவியை உருவாக்க வேண்டும் . இது தவிர உள்ளே வந்த ஒப்பந்தங்களைக் கொண்டு செலுத்த மெர்சன்டைசர் சிலர் வேண்டும் . இது தவிரப் பல வேலைகளுக்காக வெளியே அலைய ஆட்கள் வேண்டும் . முக்கியமாகப் பர்சேஸ் மேனேஜர் , பேப்ரிக் மேனேஜர் போன்றவர்கள் வந்தே ஆக வேண்டும் . அலுவலகம் சார்ந்த முக்கியப் பதவிகளைப் போலத் தொழிற்சாலைச் சார்ந்த பல பெரிய , சிறிய பதவிகளுக்கு ஆட்களை உள்ளே கொண்டு வர வேண்டும் .

என் கடந்த கால அனுபவத்தில் , தொடர்பில் இருந்த நண்பர்களை உள்ளே கொண்டு வருவது பெரிய வேலையல்ல . ஆனால் இது போன்ற நிறுவனத்தில் உள்ள பாதக அம்சங்களைக் கணக்கில் கொண்டு தயங்கிக் கொண்டே வர மறுப்பது தான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது . சமாதானப்படுத்த வேண்டியதாக இருந்தது . ” என் மீது நம்பிக்கை வைங்க ” என்று உறுதியளிக்க வேண்டியதாக இருந்தது . பல சமயங்களில் அளவு கடந்து கீழே இறங்க வேண்டியதாக இருந்தது .

மனித மனம் விசித்திரமானது . எப்போது கீழான எண்ணங்களை நோக்கியே செல்லும் வல்லமை கொண்டது . தவறு என்று தெரிந்தும் அதையே விரும்புவதும் , சூழ்நிலைகளைக் காரணம் காட்டுவதும் என அவரவர்க்கெனப் பல கொள்கைகளை வைத்துக் கொண்டு தான் இங்கே ஒவ்வொருவரும் இருக்கின்றனர் .

நாம் ஏன் அளவு கடந்து உழைக்க வேண்டும் ? இதனால் நமக்கென்ன லாபம் ? என்பதையும் கருத்தில் கொண்டே செயல்படுகின்றர் .

குறுகிய கால அறுவடையைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் . எனக்குத் தனிப்பட்ட முறையில் பல சவால்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருந்தது . அப்பாவும் மகனும் அலுவலகம் வந்தாலும் சுற்றுலா தளத்திற்கு வந்து விட்டு போவதைப் போல வந்து போய்க் கொண்டிருந்தனர் . காலையில் பத்து நிமிடம் பேசுவார்கள் . அப்புறம் சென்று விடுவார்கள் .

அலுவலக வேலைகள் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் நிறுவனத்திற்குத் தேவைப்படும் ஒப்பந்தத்திற்காக என் தொடர்பில் உள்ள பழைய நபர்களைத் தொடர்பு கொண்ட போது எல்லோரும் ஒரே வார்த்தையில் மறுத்து ஓடினார்கள் . ” அவர் நிறுவனத்திற்கா ? வேண்டாம்ப்பா ? நாங்க ஏற்கனவே பட்ட அவமானங்களும் அவஸ்த்தைகளும் போதும் ” என்றார்கள் .

பேசிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொன்னார்கள் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் .

ஒவ்வொன்றையும் விமர்சனமாக எடுத்துக் கொண்டேன் . மனம் தளராத விக்ரமாதித்தனாய் பூதத்தைச் சுமந்தபடி அடுத்தப் பயணத்தைத் தொடங்கினேன் . ஆனால் பயணம் விடை தெரியாத விடுகதை போலவே இருந்தது .

இங்கே ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும் . எந்தவொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய தியாகம் இருந்தே ஆக வேண்டும் . அது அளவில் சிறியதாகப் பெரியதாக இருக்கலாம் .

இளமைப் பருவத்தைத் தியாகம் செய்தவனால் , இளமையில் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களைத் தியாகம் செய்து உழைத்தவனுக்கு மட்டுமே வாழ்நாள் முழுக்க நல்ல வாழ்க்கை அமையக்கூடியதாக இருக்கும் . மாறுபாடுகள் இருக்கலாம் . பல இடங்களில் விதிவிலக்குகள் இருக்கலாம் . ஆனால் தலைவன் முதல் தறுதலைகள் வரைக்கும் அவரவர் அளவில் ஏதோ சில தியாகத்தீயைத் தாண்டித்தான் வெற்றிக் கோட்டை அடைந்திருப்பார்கள் .

எனக்குப் பெரிய லட்சியம் எதுவுமில்லை . ஆனால் சவால்கள் மீது மிகப் பெரிய ஈர்ப்புண்டு . ஒவ்வொரு சவால்களும் நம்மை இயக்குகின்றது . சவால்கள் நம்மைப் புதுப்பிக்கின்றது . நமக்குள் இருக்கும் திறமையை அடையாளம் காண உதவுகின்றது . எதிரிக்கும் நமக்கும் உண்டான பாகுபாட்டைப் பக்குவமாக எடுத்துரைக்கின்றது . புரிந்தவர்களுக்குப் பொக்கிஷம் . புரியாதவர்களுக்கோ ” ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குகின்றாய் ?” என்ற புலம்பல் தான் அறிவுரையாகக் கிடைக்கின்றது .

எனக்கு இப்படிப்பட்ட அறிவுரைகள் தான் தொடர்ந்து கிடைத்தபடியே இருந்தது . காரணம் நூலில் சிக்கல் இருந்தால் எளிதில் பிரித்து விடலாம் . ஆனால் சிக்கல் என்பது மலையாக இருந்தால் என்ன செய்ய முடியும் . அப்படித்தான் ஒவ்வொன்றும் இங்கே இருந்தது .

இந்த நிறுவனத்தின் மற்றொரு கொடுமையுண்டு . அலுவகத்திலிருந்து தொழிற்சாலை திருப்பூரின் மற்றொரு பகுதியில் இருந்தது . ஒரு முறை சென்று வந்தாலே பாதிப் பொழுது அதிலேயே போய் விடும் .

ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை இயங்க தேவைப்படும் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் பட்சத்தில் பல பாதகங்களை அந்த நிறுவனம் சந்தித்தே ஆக வேண்டும் . நிர்வாகத் செலவு கட்டுக்கடங்காமல் போகும் . கட்டுப்பாடு என்பது கட்டவிழ்ந்த காளை போலத் துள்ளிக் குதிக்கும் . அடக்குவது சிரமமாக இருக்கும் . முதன்மைப் பதவியில் இருப்பவர்களுக்கு மேய்க்கும் வேலைக்கே நேரம் சரியாக இருக்கும் . எவர் என்ன தவறுகள் செய்கின்றார்கள் ? என்பதைக் கவனிப்பதில் பாதிப் பொழுது போய்விடும் . செய்ய வேண்டிய வேலைக்குத்தான் வெளியே செல்கின்றார்களா ? இல்லை அவரவர் சொந்த வேலைக்காகச் சுற்றுகின்றார்களா ? என்பதைக் கவனிக்கும் போது உருவாகும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது .

மனம் சோர்ந்து விடும் . கவனிக்க வேண்டிய முக்கிய வேலைகளைத் தவிர்த்து உளவுத்துறை வேலை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் . என் ஒவ்வொரு நாளின் பொழுதும் இப்படித்தான் அவஸ்த்தைகளுடன் கழிந்தது .

நான் இந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்த மூன்றாவது நாள் அலுவலகத்தில் இருந்த நிர்வாக அதிகாரி பதறியடித்துக் கொண்டு நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு மூச்சு வாங்க நின்றார் . இரண்டு நாட்களாக அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன் . மனதிற்குள் ” நீ உலக மகா நடிகனடா ?” என்று இனம் பிரித்து வைத்திருந்தேன் . என்ன ? என்று எதுவும் பேசாமல் கண்களால் அவரைப் பார்த்து என்ன ? என்பது போலப் பார்த்தேன் .

” சார் நீங்க காலையிலேயே இங்கே நுழையும் போது சொல்ல நினைத்து மறந்து விட்டேன் . இப்பொழுதான் எம் . டி கூப்பிட்டு இருந்தார் . உங்களைப் பேக்ட்ரிக்கு வரச் சொல்லியிருந்தார் ” என்றார் .

நான் ஒன்றும் பேசவில்லை . செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே எடுத்து வைத்து விட்டு எழுந்து அவருடன் கீழே இறங்கி வந்த போது வெளியே எனக்கான வாகனம் நின்று கொண்டிருந்தது .

எனக்காக வரவழைக்கப்பட்ட வாகனத்துக்குப் பின்புறம் மற்றொரு வெளிநாட்டுக் கார் நின்று கொண்டிருந்தது . நான் குழப்பத்துடன் நிர்வாக அதிகாரியைப் பார்த்த போது ” எம் . டி யே வந்து விட்டார் . என்னை மாட்டிக் கொடுத்து விடாதீர்கள் . பின்னால் நிற்கும் வண்டியில் இருவரும் இருக்கின்றார்கள் . அதில் போய் ஏறிக் கொள்ளுங்க ” என்றார் . இருவர் என்றால் அப்பாவுடன் மகனும் இருக்கின்றார் என்று அர்த்தம் . இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஜால்ராக்கள் ” சின்னவர் ” ” பெரியவர் ” என்று அழைத்தனர் . நானோ ” சின்னப்புத்தி “, ” பெரிய புத்தி ” என்று மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன் .

நிர்வாக அதிகாரி சொன்னதைப் புரிந்து கொண்டு பின் பக்கமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை நோக்கிச் சென்றேன் .

ஒட்டுநர் இருக்கையில் மகன் அமர்ந்திருந்தார் . பின்பக்க இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு எம் . டி இருந்தார் . வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்று ” உள்ளே வந்து உட்காருங்க ” என்றார் .

மரியாதைக்காகச் சற்று தள்ளியே அமர்ந்து கொண்டேன் . வண்டி சென்று கொண்டிருந்த போது தனது சுயபுராணத்தை அளந்து விட்டுக் கொண்டே வந்தார் . அமைதியாகக் கேட்டுக் கொண்டே அவர் கண்களையே கவனித்துக் கொண்டு வந்தேன் .

உலகத்திலேயே மிகவும் ஆபத்தான மனிதர்கள் பல வகையினராக இருக்கின்றார்கள் . அதிலும் மிக ஆபத்தானவர்கள் சுயமோகி .

தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளுதல் . தன்னைப் பற்றியே மற்றவர்களிடம் பெருமையடித்தல் . தன் எதிரே நிற்கும் நபர் தன்னைப் பற்றிப் புகழ்வதை ரசித்துக் கேட்டுக் கொள்ளுதல் . எதிரே இருப்பவன் தரம் என்ன ? தராதரம் என்ன ? என்பதைப் பற்றியே யோசிக்காமல் தன்னை மன்னன் போலக் கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதையெல்லாம் எதிரே இருப்பவர்கள் நம்ப வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் .

குடும்ப வாழ்க்கையில் இந்தப் பழக்கம் இருந்தாலே நம் மரியாதைக்கு உத்திரவாதம் இருக்காது . தொழில் வாழ்க்கையில் இருந்தால் என்னவாகும் ? பெரும்பாலும் தன் திறமையைப் பற்றித் தாழ்வான எண்ணம் கொண்டவர்களிடத்திலும் , தன் திறமையை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களிடத்திலும் , போட்டி போட முடியாதவர்களிடத்தில் மட்டுமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும் .

” மற்றவர்கள் நம்மை விரும்புவதை விட நம்மை நாமே விரும்ப வேண்டும் ” என்பது தான் நம் தனிப்பட்ட வளர்ச்சியின் பாலபாடம் . ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவுண்டு என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும் .

” பேச்சைக் குறை . செயலில் காட்டு ” என்பதற்கான அர்த்தமே நாம் செய்யும் செயலே நம்மைப் பற்றி மற்றவர்கள் பேசுவதாக இருக்க வேண்டும் . அது நல்லதாக இருக்கலாம் . இல்லை விமர்சனமாக இருக்கலாம் . எப்படி இருந்தாலும் நாம் அதை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் . நான் இப்படித்தான் என்னை மாற்றிக் கொண்டிருந்தேன் .

ஆனால் பேசிக் கொண்டிருந்தவரோ என்னைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் முட்டாள் . நான் தான் வில்லாதி வில்லன் . சூரப்புலி என்று கதையளந்து கொண்டிருந்தார் .

நாங்கள் தொழிற்சாலை இருந்த இடத்திற்குச் சென்று சேர்வதற்குத் தேவைப்பட்ட அரை மணி நேரத்திற்குள் என்னால் தாங்க முடியாத அளவிற்குப் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் . தொழிற்சாலையின் உள்ளே வண்டி நுழைந்தது . நுழைவாயிலில் செக்யூரிட்டி என்ற பெயரில் ஒரு வயதான பெரியவர் நின்று கொண்டிருந்தார் . நிச்சயம் அவர் உள்ளே தோட்டத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் .

தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியையும் அப்பாவும் , மகனும் எனக்குக் காட்டிக் கொண்டே வந்தார்கள் . படிப்படியாக விளக்கிக் கொண்டே இடையிடையே இருபது வருடத்திற்கு முன் அவர் செய்த சாதனைகள் இந்தத் தொழிற்சாலை இயங்கிய விதத்தை விவரித்துக் கொண்டே வந்தார் . மகன் ஒத்து ஊதிக் கொண்டிருந்தார் .

தொழிற்சாலை என்ற பெயரில் இருந்ததே ஒழிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லை . கடந்த நாலைந்து வருடங்களாகச் செயல்படாமல் முடங்கிப் போய்க் கிடந்தது .

அதுவொரு மிகப் பெரிய தோட்டம் . தோட்டத்தின் உள்ளே ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் பிரிந்து ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்திற்குத் தேவைப்படும் ஒவ்வொரு வசதியையும் உருவாக்கியிருந்தார்கள் . உள்ளே நுழைந்தவுடன் உற்பத்தி சார்ந்த கட்டிடங்கள் இருந்தன . அடுத்தப் பகுதியில் பிரிண்டிங் இருந்தது . தோட்டத்தின் மற்றொரு பகுதியில் சாயப்பட்டறை சார்ந்த அத்தனை வசதிகளும் இருந்தது . தோட்டத்தின் இறுதியில் பலதரப்பட்ட அறவு எந்திரங்கள் பொருத்தப்பட்ட நிட்டிங் பகுதி இருந்தது .

ஒவ்வொரு பகுதிக்கும் இடையே வயல்வெளி இருந்தது . உள்ளே இருந்த வயல் பகுதியில் சோளத்தட்டையும் , தென்னை மரங்களும் இருந்தது . கிராமத்திற்கு நுழைந்தது போல இருந்தது . சுத்தமான காற்று உடம்பைத் தழுவியது .

ஆனால் எந்த இடத்திலும் பொறுப்பான ஆட்கள் இல்லை . எல்லா இடங்களிலும் நாமே நுழைந்து இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டியதாக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டேன் .

தொழிற்சாலையில் தைக்க வேண்டிய 300 க்கும் மேற்பட்ட எந்திரங்கள் கேட்பாரற்று தூசியடைந்து போய்க் கிடந்தது . உள்ளே ஒவ்வொரு இடத்திலும் மலை போலக் குப்பைகள் குவிந்து கிடந்தது . சாயப்பட்டறை இவர்கள் செய்த தவற்றின் காரணமாக மூடப்பட்டு அனுமதிக்காகக் காத்திருந்தது . நிட்டிங் பகுதி காயலான் கடைக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு இருந்தது . ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்து கடைசியாகப் பிரிண்டிங் இருந்த பகுதிக்குள் நுழைந்தோம் .

ஓடுகள் வேயப்பட்ட நீண்ட தாழ்வாரம் பகுதி போன்ற இடத்திற்குள் சென்ற போது அந்தப்பகுதி முழுக்க இருட்டாக இருந்தது . மின்சார வசதிகளைத் துண்டித்து வைத்திருந்தார்கள் . காரணம் கேட்ட போது மின்சார வாரியத்திற்குப் பணம் கட்டாத காரணம் என்று சொன்னார் . அதுவும் நிர்வாக அதிகாரி மேல் பழியைப் போட்டார் .

அப்பாவும் , மகனும் நுழைவாயிலில் இடத்தில் நின்று கொண்டார்கள் . நான் கும்மிருட்டில் தடவித் தடவி உத்தேசமாக நகர்ந்து மேலோட்டமாகப் பார்த்து விட்டு வாசல்படியை நோக்கி நகர்ந்து வந்த போது புஸ் புஸ் என்ற சப்தம் கேட்க நடப்பதை நிறுத்தி விட்டு இருட்டுக்குள் என் கண்களைச் செலுத்தினேன் . சில நொடிகளுக்குப் பிறகு அந்தச் சிறிய வெளிச்சம் தென்பட்டது . மேலும் உற்று நோக்க அது பாம்பின் கண்கள் என்று தெரிந்து . ஒன்றல்ல ? நாலைந்து பாம்புகள் படம் எடுத்துக் கொண்டு என் முன்னால் நின்று கொண்டிருந்தது . என் ராஜ்ஜியத்திற்குள் ஏன் வந்தாய் ? என்று கேட்பது போல வழியில் வரிசையாக நின்றது .

சூரப்புலியோ வெளியே நின்று கொண்டு தன் சுயபுராணத்தை விடாமல் பேசிக் கொண்டிருந்தார் .

என் உடம்பின் உள்ளே வியர்வை ஆறாக ஓடிக் கொண்டிருந்தது .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *