12

11. காற்றில் பறக்கும் கௌரவம்

” இன்றும் அவர் வீட்டுக்கு வந்திருந்தார் . இந்த முறை கட்டாயம் நீங்கள் நாளைக்கு அங்கே வர வேண்டும் என்று சொல்லிச் சென்றுள்ளார் . போயிட்டு தான் வந்துடுங்களேன் “

மனைவி சொன்ன போது அதனைப் புறக்கணித்து விட்டு அப்போது நான் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டேன் .

எனக்கு மற்றொரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது . என் வீட்டுக்கு வந்தவர் அந்த நிறுவனத்தின் ADMINISTRATIVE OFFICER என்று சொல்லப்படும் நிர்வாக அதிகாரி . கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் வீட்டுக்கு வந்து விட்டார் . முதலாளியை பார்க்கச் சொல்லி அவர் அழைப்பு விடுத்தும் நான் செல்லவில்லை .

ஆனால் அன்று மதிய வேளையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளியே அலைபேசியில் அழைக்க என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது .

” நீங்க அவசியம் வர வேண்டும் . என் மகனும் இப்பொழுது தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார் . மொத்த நிர்வாகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன் . அனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்கள் அவருடன் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் ” என்றார் .

அவர்களின் எதிர்பார்ப்பு ஒரு ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட எடுத்து நடத்திச் செல்ல வேண்டும் . அதுவும் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் முதன்மையாக இருக்க வேண்டும் .

யார் மூலமோ என்னைப் பற்றித் தெரிந்து வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு வந்து விட்டார்கள் . ஒரு நிர்வாகத்தின் ‘ பொது மேலாளர் ‘ என்றால் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியதாக இருக்கும் . ஆனால் இங்கு இனிமேல் தான் ஒவ்வொன்றையும் உருவாக்க வேண்டும் . அதாவது காய்ந்து போய் நிற்கும் மரத்தை நம் திறமையால் துளிர்க்கச் செய்ய வேண்டும் .

காலம் செய்யும் கோலத்தை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது .

‘ என்னை மிஞ்சியவர்கள் இந்த உலகில் யாருமில்லை ‘ என்று கருதிய மாமன்னர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கைத் தடங்களின் அடையாளங்களில் எதுவும் மிஞ்சவில்லை . சம்மந்தப்பட்டவர்களின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்களா ? எப்படி இறந்தார்கள் ? என்பது கூட அறியாத அளவுக்குக் கொடுமையான காலம் அனைத்தையும் கரைத்து விட்டது .

பதவியைப் போதையைப் போல ரசித்து ருசித்தவர்களின் அந்திம வாழ்க்கை சொல்லும் கதை அனைத்தும் அந்தோ பரிதாபம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது . இனி மிச்சம் ஏதும் இருக்கக்கூடாது என்று உச்சமாய் அதிகாரத்தைச் சுவைத்து வாழ்ந்த அதிகாரவரக்கத்தினர் பலரின் வயோதிக வாழ்க்கை என்பது அனாதை விடுதியில் தான் கொண்டு போய்ச் சேர்க்கின்றது .

சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட நிலைகளைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழில் நிறுவனங்களின் கதையும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாகச் சொல்கின்றது .

பெயர்ப் பொருத்தம் பார்த்து வைத்த நிறுவனங்கள் , ஜாதகத்தில் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் , வாஸ்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் போன்ற சிறப்பம்சம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை தலைமுறைகள் தொடர்கின்றது ?

இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இங்கே உருவான தொழில் நிறுவனங்களில் இன்று எத்தனை தாக்குப் பிடித்து நிற்கின்றது ? ஏனிந்த அவலம் ? அரசியல் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு .

நாம் இந்தத் தலைமுறையில் தான் தொழில் குறித்து யோசிக்கவே தொடங்கியுள்ளோம் . இந்தியர்கள் அனைவரும் அடிப்படையில் விவசாயச் சிந்தனைகள் கொண்டவர்கள் . தொழில் சார்ந்த சிந்தனைகளில் தொடக்க நிலையில் தான் உள்ளோம் . மிகக் குறைவான பணப்புழக்கத்தோடு வாழ்ந்த பழகிய மக்களிடம் அளவு கடந்து பணம் புழங்க அதை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமலேயே கண்டதே காட்சி . கொண்டதே கோலம் என்ற நிலையில் இருக்கின்றார்கள் .

பஞ்சம் , பசி , பட்டினியில் உழன்ற பல கோடி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாகத் தான் வறுமை என்ற விசயத்தையே மறக்கத் தொடங்கியுள்ளனர் . தங்களுக்குண்டான அடிப்படை விசயங்களையே தற்பொழுது தான் நம்மால் பெற முடிந்துள்ளது .

ஆனால் மேற்கத்திய நாடுகளோ கடந்த பல தலைமுறைகள் தொழில் சிந்தனைகளில் ஊறி தற்பொழுது நோகாமல் நோம்பி கொண்டாடும் கலையில் கில்லாடியாக மாறியுள்ளனர் . இதன் காரணமாக எந்த நாட்டைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தினந்தோறும் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றார்கள் .

நாமும் நம் நாட்டைக் குப்பையாக மாற்றிக் கொள்ளச் சம்மதிக்கின்றோம் . ” நீ குனிய வைத்து குத்த வேண்டாம் . நானே குனிந்து கொள்கிறேன் ” என்று இடம் கொடுக்கின்றோம் .

வெளியே உள்ள உதாரணங்களை விடத் திருப்பூர் நிறுவனங்களைக் கொஞ்சம் பார்த்து விடலாமா ?

தற்பொழுது திருப்பூரில் இரண்டாம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாதி நிறுவனங்கள் காணாமல் போய்விட்டது . மீதியுள்ள நிறுவனங்களும் இன்றோ நாளையோ என்று தள்ளாடிக் கொண்டுருக்கின்றது .

காரணம் இரவு பகல் பாராமல் ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பின் மூலம் வளர்க்கப்பட்ட நிறுவனங்களை உழைப்பது என்றால் எட்டிக்காய் போலப் பாவிக்கும் இளந்தலைமுறையினரிடம் கொடுத்தால் என்னவாகும் ? பிறந்த சில வருடங்களில் விடுதிகளில் கொண்டு போய்த் தள்ளிவிட்டு வந்தவர்களை வளர்ந்து வாலிபனான பின்பு தான் வீட்டுக்கு அழைத்து வருகின்றார்கள் . வெளியுலகமே தெரியாமல் வசதிகளுடன் மட்டுமே வாழ்ந்தவர்களைத் திடீரெனச் சமூகத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் அவர்களுக்கு என்ன தெரியும் ? தலையும் புரியாது , வாலும் தெரியாது . அர்த்தமற்ற அதிகாரம் தூள் பறக்கும் . நல்லது அனைத்தும் கெட்டதாகத் தெரியும் . கெட்டவை அனைத்தும் நல்லதாகத் தெரியும் . கடைசியில் நாறிப் போன நடிகைகள் காலடியில் கிடக்கத் தான் முடியும் .

அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது .

ஒவ்வொரு மனிதனும் பார்த்துப் பார்த்து செய்த காரியங்கள் அனைத்தும் ஓரளவுக்கு மேல் உதவுவது இல்லை . ‘ நாம் இந்தத் தொழில் ராஜ்ஜியத்தை ஆண்டு விடுவோம் ‘ என்று தொடங்கியவர்கள் கடைசியில் பூஜ்ஜியத்துக்கு வந்து விடுகின்றார்கள் . இப்படித்தான் நான் கடந்து இருபது ஆண்டுகளாகத் திருப்பூருக்குள் வீழ்ந்த ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கதையைச் சொல்கின்றது .

நான் திருப்பூருக்குள் நுழைந்த முதல் இரண்டு வருடங்களில் மிகப் பெரிய அளவில் வளர்ந்த பல ஏற்றுமதி நிறுவனங்களின் கதையைக் கேட்டு அண்ணாந்து பார்த்துள்ளேன் .

வெளியுலகத்தைப் பற்றி ஏதும் தெரியாத எனக்கு ஒவ்வொன்றும் மந்திரக் கதையாகவே தெரிந்தது . மிகப் பெரிய அளவில் வளர்ந்த ஒவ்வொரு நிறுவனத்தின் வருடாந்திர வரவு செலவுகள் , அங்குப் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன் .

அதுவரையிலும் வாழ்க்கையைப் புத்தகங்களின் வழியே பார்த்தவனுக்கு எல்லாமே வியப்பாகவே இருந்தது . நேரிடையாக ஒவ்வொன்றையும் பார்க்க நான் படித்த மாயஜாலகதைகள் போலவே தெரிந்தது . இவை அனைத்தும் யாரோ ஒருவரின் உழைப்பும் இடைவிடாத முயற்சியும் அல்லவா ? என்று பெருமைப்பட்டும் இருக்கின்றேன் .

ஆனால் கடிகார முள் போலக் கஷ்டப்பட்டு ஏறியவர்கள் ஏறிய வேகத்தை விட மிக வேகமாக இறங்கியும் போய்விட்டார்கள் . இறங்குமுகம் கண்ட நிறுவனங்களின் வீழ்ச்சி எனக்குப் பெரிதான ஆச்சரியத்தைத் தரவில்லை . அந்த வீழ்ச்சியை அந்த முதலாளி எப்படி எதிர் கொண்டார் ? அதன் பிறகு அவரின் நடவடிக்கைகள் , வாழ்க்கை முறை எப்படி மாறி விடுகின்றது ? என்பதனை கவனித்தவன் என்ற முறையில் அதனைப் பற்றி இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன் .

பணம் சம்பாரிப்பது கடினம் என்பவரா நீங்கள் ? என்னைப் பொருத்தவரையிலும் பணம் யார் வேண்டுமனாலும் சம்பாரிக்கலாம் . அதற்கான வாய்ப்புகள் வந்தே தீரும் . நாம் தான் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் . வாய்ப்புகள் வரும் போது வாய் பிளந்து கொண்டு வேறு பக்கம் பார்த்து நின்று கொண்டிருந்தால் வந்த சுவடு தெரியாமல் அந்த வாய்ப்புகளும் காணாமல் போய்விடும் . காலம் முழுக்க விதியை நம்பி புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான் .

ஆனால் கிடைத்த வாய்ப்பின் மூலம் உருவான வெற்றியை அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கடைசி வரைக்கும் கட்டிக்காப்பது தான் மிகச் சவாலான விசயமாக நினைக்கிறேன் . இங்கே பணம் குறித்த பழமொழிகளைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை . பணம் என்பது அனைத்தையும் மாற்றிவிடக்கூடியது என்பதை மட்டும் எப்போதும் உங்கள் நினைவில் வைத்திருக்கவும் .

உங்களின் ஆசைக்கு எல்லையிருக்காது . அதனால் உருவாகும் ஆணவத்திற்கும் அளவேயிருக்காது .

சில மாதங்களுக்கு முன் திருப்பூரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்குச் சென்றிருந்த போது நடந்த சம்பவமிது . புத்தகக்கடை நண்பர் அப்போது அங்கு வந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார் . பேச்சின் சாரம்சத்தை வைத்து நானே புரிந்து கொண்டேன் . வந்திருந்தவர் இவரிடம் வட்டி வாங்க வந்துள்ளார் . இவர் அடுத்த வாரம் தருகின்றேன் என்று சொல்ல வசூலிக்க வந்தவர் கேவலமாகத் திட்டிக் கொண்டிருந்தார் . அவர் சென்றவுடன் அவரைப் பற்றி நண்பர் சொன்ன விசயங்கள் தான் பணத்தைப் பற்றி அதிகம் யோசிக்க வைத்தது .

திருப்பூருக்கு வரும் போது அடிப்படைச் செலவுக்கே வழியில்லாமல் ஏதோவொரு நிறுவனத்தில் எடுபிடியாக வேலையில் சேர்ந்துள்ளார் . அங்கே பணியாற்றிய போது செய்த தவறுகளால் வெளியேற்றப்பட்டுள்ளார் . காலம் கொடுத்த வாய்ப்பில் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பார் வசதியுள்ள இடத்தை எப்படியோ எவர் மூலமோ பெற்று விட்டார் .

இரண்டு வருடங்களில் ஒரு கடை என்பது ஆறு கடையாக மாறிவிட்டது . இன்று குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நிகர லாபமாக ஐம்பதாயிரம் ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார் . கையில் வைத்துள்ள பணத்தைப் பெருக்க முக்கியமான நபர்களுக்கு வட்டிக்கு விட்டுத் தனியாகச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார் . அன்று அந்த நபரின் மாத வருமானத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுப் பார்த்தேன் . பல இடங்களில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார் . வீட்டு வாடகை வருமானம் மற்றும் இதர அனைத்து வருமானத்தையும் கணக்கிடும் போது மாதத்திற்கு இருபது லட்சம் ரூபாய் வந்தது .

வருமான வரி கட்டத் தேவையில்லை . அடிமை வாழ்க்கை இல்லை . அறம் சார்ந்த கொள்கைகள் இல்லை . ஆனால் அவருக்கு வரக்கூடிய மாத வருமானம் என்பது திருப்பூரில் உள்ள சிறிய ஆய்த்த ஆடை நிறுவனம் பெற தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக மூன்று மாதங்கள் உயிரைக் கொடுத்துப் பாடுபட வேண்டும் . அந்த நபர் முதலீடு எதுவும் இல்லாமல் சம்பாரிப்பவர் . ஆனால் முதலாளிகளோ வங்கிக் கடனை தங்கள் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் .

இது தவிர எந்த வெளிநாட்டுக்காரன் எப்போது ஆப்பு அடிப்பான் ? என்று கலங்கி தூக்கம் மறந்து கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும் .

பணம் யாரிடம் தான் இல்லை ?.

சென்னையில் ஒரு நபர் மாநகராட்சி சார்பாகப் பொதுமக்களுக்காக இலவசமாகக் கட்டி விடப்பட்டுள்ள கழிப்பறையை அங்கங்கே உள்ள வார்டு கவுன்சிலர்களைத் துணை கொண்டு ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு கட்டண கழிப்பறையாக மாற்றித் தினந்தோறும் பல ஆயிரம் ( கொடுக்க வேண்டிய கமிஷனுக்குப் பிறகும் ) ரூபாயை சம்பாரித்துக் கொண்டிருப்பதாகச் செய்தித்தாளில் படித்த போது சிரிப்பு தான் வந்தது . சாதாரணமானவர்களுக்கு அது கழிப்பறை . ஆனால் அதுவே ஒரு தனிநபருக்கும் பணம் தரும் கற்பகத்தரு .

ஆனால் இங்குள்ள ஏற்றுமதி நிறுவன முதலாளிகள் கௌரவத்திற்காகக் கடனில் வாழ்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையையும் கடனே என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . இங்கு மற்றொரு விசயத்தைப் பற்றி நாம் பேசியாக வேண்டும் .

ஒருவரின் தவறுகள் அடுத்தவருக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் அல்லவா ? அவர் செய்த தவறுகளை நாமும் செய்து விடக்கூடாது என்று தானே படிப்பினையாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தானே நினைப்பார் ?. ஆனால் நிஜ வாழ்வில் அப்படி நடப்பதில்லையே ? ஏன் ?

அங்குத் தான் விதிக்கும் மதிக்கும் உண்டான போராட்டமே தொடங்குகின்றது . ஆசை பெரிதா ? அடக்கம் பெரிதா ? என்றால் ஆசை தான் முன்னுக்கு வந்து முகம் காட்டி நிற்கின்றது .

பத்து லட்சம் ரூபாய் மூதலீடு போட்டு ஒருவர் சிறிய ஆயத்த ஆடைத் தொழிற்சாலையைத் தொடங்குகின்றார் . அவரின் உழைப்பு ஒரு வருடத்திற்குள் உயர்த்தி விடுகின்றது . அவரிடம் இருக்கும் நேர்மை அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகின்றது . பல தொடர்புகள் உருவாகின்றது . ஒரு நாளின் மொத்த நேரத்தையும் தொழிற்சாலைக்காக அர்ப்பணித்து வளர்த்தவரின் எண்ணங்கள் மாறத் தொடங்குகின்றது .

அது வரையிலும் அவர் கொண்டிருந்த வாழ்க்கை குறித்த பார்வைக்கும் பணம் வந்தவுடன் தனது குடும்பம் , விருப்பங்கள் சார்ந்த பார்வையும் மொத்தமாக மாறத் தொடங்க எல்லாமே தலை கீழாகப் போகத் தொடங்குகின்றது .

பணிபுரியும் பெண்கள் அனைவரும் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக் கடமை பட்டுள்ளவர்கள் என்று ஒரு முதலாளி நினைத்தால் அவரின் தொழில் சிந்தனைகள் எப்படியிருக்கும் ?

இரவு என்பது மதுக் கொண்டாட்டத்திற்கு மட்டுமே என்று கருதிய முதலாளியால் மறு நாள் காலை எப்படி ஆரோக்கியத்தோடு பணிபுரிய முடியும் ?

பலரைச் சார்ந்து தான் இந்தத் தொழிலில் இருக்கின்றோம் ? எவரையும் நீண்ட காலம் ஏமாற்ற முடியாது . அப்படி ஏமாற்றினால் நாமும் வீழ்ந்து விடுவோம் ? என்று யோசிக்கத் தெரியாதவனை முதலாளி என்பீர்களா ? முழு முட்டாள் என்று அழைப்பீர்களா ?

இந்த மூன்று வட்டத்திற்குள் தான் இங்குள்ள நிர்வாக அமைப்புச் செயல்படுகின்றது . இதையும் தாண்டி அறம் சார்ந்து செயல்படுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் வருடந்தோறும் நிறைவாகவே தங்கள் தொழிலை செய்து கொண்டிருகின்றார்கள் .

நானும் நிறைவாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன் . ஆனால் நேரம் ஒன்று இருக்கின்றதே ? அது தான் இந்த நிறுவனத்தின் பக்கம் என்னை நகர்த்தியது . இந்த நிறுவனத்தை நான் திருப்பூருக்குள் நுழைவதற்கு முன்பே அறிந்தவன் என்றால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

கல்லூரியில் நான் படிக்கும் போது திருப்பூர் என்ற ஊர் குறித்து எதுவும் தெரியாது . 1989 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன் . அப்போது தமிழிலில் வந்து கொண்டிருந்த ‘ இந்தியா டுடே ‘ பத்திரிக்கையில் திருப்பூர் குறித்து ஒரு சிறப்புக்கட்டுரை வெளிவந்திருந்தது . அதில் திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த தொழில் அதிபர்கள் குறித்து அவர்களின் வெற்றிப் புராணத்தை விலாவாரியாக விவரித்து இருந்தார்கள் . அதில் குறிப்பிடப்பட்டிருந்த முதலாளிகளின் பெயர்கள் , அவர்களின் நிறுவனம் குறித்த வளர்ச்சியை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது .

இப்போது எனக்கு அழைப்பு விடுத்தவர் அதில் வந்திருந்த முதலாளிகளில் ஒருவர் . கட்டுரைப் படத்தில் பார்த்த அவர் முகம் கூட மறந்து விட்டது . அவர் யார் என்றே எனக்குத் தெரியாது . அவரின் பெயரும் நிறுவனப் பெயரும் மட்டும் 25 ஆண்டுகள் கழித்து அவரை நேரிடையாகச் சந்தித்த போது நினைவுக்கு வந்தது . அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அன்று நான் படித்த அந்தக் கட்டுரை வரிகள் தான் என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது .

ஆனால் கட்டுரை வெளி வந்த சமயத்தில் இநத முதலாளி உச்சாணிக் கொம்பின் உயரத்தில் இருந்தார் . இன்று அதளபாதாளத்தில் இருந்தார் . அதுவும் எனக்கு மற்றவர்கள் சொல்லித்தான் இந்த நிறுவனத்தின் வீழ்ச்சியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது . பல தனி மனிதர்களின் தொழில் சார்ந்த வீழ்ச்சி தான் ஒரு தொழில் நகரத்தின் முகத்தை மாற்றுகின்றது . இப்படித்தான் தொழில் நகரம் குறித்த பார்வையும் பலருக்கும் பலவிதமாகப் போய்ச் சேருகின்றது .

திருப்பூர் குறித்துப் பல பார்வைகள் உள்ளது . ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இந்த ஊரைப் பார்க்கின்றனர் . என்ன காரணம் ? ஏன் இப்படி ? என்பதனை முதலில் பார்த்து விடுவோம் . இதைத் தெரிந்தால் மட்டுமே இங்குள்ள வெற்றிக்கும் தோல்விக்கும் உண்டான காரணக் காரியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .

திருப்பூர் என்றால் இங்கு வாழ்கின்ற அத்தனை பேர்களும் ஆயத்த ஆடைத் தொழிலோடு சம்மந்தப்பட்டவர்கள் என்று எண்ணம் இருந்தால் அதை உங்கள் எண்ணத்தில் இருந்து துடைத்து விடவும் .

ஆயத்த ஆடைத்துறைக்குச் சம்மந்தம் இல்லாத பலரும் இங்கே பலதரப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் .

அவர்களைப் பொறுத்தவரையிலும் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனமும் பனியன் கம்பெனி . அவ்வளவு மட்டுமே . மற்றபடி இதன் நிர்வாக முறைகள் . ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதுவும் தெரியாது . இதே போலத்தான் திருப்பூருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் திருப்பூர் ஏற்றுமதித் தொழிலை அவரவர் பார்வைக்குத் தகுந்தாற் போல உருவகப்படுத்திக் கொள்கின்றனர் .

கடந்த இருபது வருடத்தில் இங்குள்ள மண்ணின் மைந்தர்கள் பலருடனும் பேசியுளேன் . இங்கேயே குறைந்த பட்சம் இரண்டு தலைமுறைகள் வாழ்ந்தவராக இருப்பார்கள் . நம்மை விடத் திருப்பூரின் படிப்படியான வளர்ச்சியை மிக அருகில் இருந்து பார்த்தவர்களாக இருப்பார்கள் .

ஆனால் அவர்களால் கூட இந்தத் தொழிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை . அதே போல ஒருவரின் தொழில் ரீதியான வீழ்ச்சியையும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள் .

வீழ்ச்சி என்பதனை எப்படிச் சொல்வீர்கள் ? பண இழப்பா ? தொழில் சரிவா ? குடும்பம் சீர்குலைதலா ?

இந்த மூன்றுக்கும் அடிப்படைக் கட்டுமானம் ஒன்றே ஒன்று தான் . உங்களுக்குண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறையில்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும் .

இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டு தான் அந்த நிறுவனத்தின் முதலாளியை சந்திக்கச் சென்றேன் . பெரிய குளிர்சாதன அறையில் அவருடன் மகன் மற்றும் அவரின் இரண்டு ஆலோசகர்களும் இருந்தார்கள் . அங்கிருந்த ஆலோசகர்கள் இருவரும் என்னைப் பரிசோதிக்க வந்தவர்கள் .

நான் இந்த நிறுவனத்திற்குச் செல்லப் போகின்றேன் என்று சொன்னதுமே நெருங்கிய நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள் . ‘ ஐந்து மாதங்கள் கூட உன்னால் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது ‘ என்றார்கள் . இதைப் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி என்னைப் பயமுறுத்தினார்கள் .

‘ காரணத்தைச் சொல்லுங்களேன் ‘ என்றால் வேண்டாம் . ‘ வேறெங்கும் உருப்படியான நிறுவனத்தில் போய்ச் சேர்ந்து விடு ‘ என்றார்கள் . ” கோடு போட்ட இடத்தில் நிரப்புக ” என்று பள்ளிக்கூடப் பரிட்சையில் எழுதுவோமே ? அப்படித்தான் ஒவ்வொருவரும் சொன்னார்கள் . என் மனதிற்குள் இனம் புரியாத ஆவல் உருவானது .

பேய் , பூச்சாண்டி போலப் பயம் காட்டுகின்றார்களே ? அப்படியென்ன இந்த மனிதர் மோசமானவரா ? என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் உருவாகி சந்திக்கச் சென்றேன் . இனிய சந்திப்பு . இனிப்பான வார்த்தைகள் . மகிழ்ச்சியான பிரியாவிடை .

நான் குறிப்பிட்டுச் சொன்ன தேதி வரைக்கும் முதலாளியால் காத்திருக்க முடியாமல் இடையில் இரண்டு முறை அழைத்து ” சற்று முன்னதாக வந்து விடுங்களேன் ” என்ற சிரித்துக் கொண்டே அழைத்தார் .

விதி வலியது அல்லவா ? என் பயணத்தைத் தொடங்கினேன் . அவர் சொன்ன தேதியில் அவர் விருப்பப்படியே போய்ச் சேர்ந்தேன் . அலுவலகம் முதல் மாடியில் இருந்தது . அப்பாவும் , மகனும் அழைத்துப் போய் என் இருக்கையைக் காட்டி அமர வைத்து என் முன்னே அமர்ந்து சற்று நேரம் பேசி விட்டு அவரவர் அறைக்குச் சென்று விட்டனர் .

கீழ் தளத்தில் இருந்த அலுவலக நிர்வாக அதிகாரி இன்டர்காம் வழியாக அழைத்து ” உங்களைப் பார்க்க ஒருவர் சாயப்பட்டறையில் இருந்து வந்துள்ளார் ?” என்றார் .

எனக்கு வியப்பாக இருந்தது . வந்தமர்ந்த பத்து நிமிடத்தில் என்னைப் பார்க்க ஒருவரா ? நாம் இங்கே வந்து சேர்வது குறித்து முக்கியமான நபர்களைத் தவிர வேறு எவருக்குமே தெரியாதே ? என்று யோசித்துக் கொண்டே அவரை மேலே வரவழைத்தேன் .

மேல் தளத்தில் அலுவலகம் என்ற பெயரில் இருந்ததே தவிர ஒரு காக்கை குருவி கூட இல்லை . 30 பேர்கள் பணிபுரியும் வசதிகள் இருந்த அந்த அலுவலகத்தில் நான் மட்டும் அப்போது தொடக்கப் புள்ளியாக இருந்தேன் .

இது குறித்து ஏற்கனவே முதலாளியுடன் பேசிய போது ” நீங்களே உங்கள் விருப்பத்தின்படி ஒவ்வொரு துறைக்கும் ஆள் எடுத்துக் கொள்ளுங்களேன் ” என்று சொல்லியிருந்தார் . ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்ன ஆனார்கள் ? என்ற கேள்வியை மனதிற்குள் வைத்துக் கொண்டே செய்ய வேண்டிய காரியங்களை ஒரு தாளில் பட்டியலிட்டுக் கொண்டிருந்த போது என் இருக்கைக்கு வந்தவர் என் அனுமதி இல்லாமலேயே என் முன் இருக்கையில் அமர்ந்தார் .

அவரை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னால் அவரிடம் இருந்து மிரட்டலாய் ஒரு கேள்வி வந்தது .

” எங்கள் அறுபது லட்ச ரூபாயை எப்போது தரப்போகின்றீர்கள் ?” என்றார் .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book