10 10. நேர்மையே உன் விலை என்ன ?

10. நேர்மையே உன் விலை என்ன ?

மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நள்ளிரவு வரைக்கும் அலைபேசியில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டேயிருந்தது . புதிய எண்கள் . புதிய குரல்கள் . ஆனால் சொல்லி வைத்தாற் போல் வசைமாறி பொழிந்து தள்ளிக் கொண்டேயிருந்தார்கள் .

நீங்கள் மிரட்டப்பட்டவரா ? அல்லது மிரட்டியவரா ? இரண்டு இடத்திலும் கொஞ்சம் தான் வித்தியாயம் இருக்கும் .

ஒவ்வொரு இடத்திலும் மிரட்டுபவரை கவனித்துப் பாருங்கள் . மனதளவில் கோழையாக , தன் உழைப்பை நம்பாமல் , சூழ்நிலையைப் புரிந்து கொண்டு போட்டி போட முடியாமல் , விரும்பாமல் , போட்டிக்கான தன் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அத்தனை பேர்களும் மிரட்டும் நபர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . அவர்கள் பார்வையில் திறமைசாலிகள் அத்தனை பேர்களும் எதிரிகளாகத் தான் தெரிவார்கள் .

இது தான் சமூக நியதியாக உள்ளது .

வாழ்க்கையென்பது ” இப்படித்தான் வாழ வேண்டும் ” என்று கட்டுப்பெட்டி தனத்திற்குள் உங்களைப் பொறுத்தியிருந்தால் இது போன்ற சமயங்களில் உங்கள் நிலைமை திண்டாட்டமாகத்தான் இருக்கும் . அல்லது ” என் வாழ்க்கை இப்படித்தான் . ஆனால் ‘ எதையும் தாங்கும் இதயம் ‘ எனக்குண்டு ” என்பவராயின் இன்னும் கொஞ்சம் மேலே வந்து படபடப்பு குறைந்து பக்குவமாக அணுக முடியும் .

இதற்கு அடுத்த நிலை ஒன்றுண்டு . எப்பேற்பட்ட மோசமான குணாதிசியங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச் சூழ்நிலையிலும் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருத்தல் . நான் பலபடிகளைக் கடந்து இந்த நிலைக்குத் தான் இந்தச் சமயத்தில் வந்து சேர்ந்து இருந்தேன் .

காரணம் அனுபவமே ஆசான் என்பார்களே ? அந்தந்த நிலையில் கற்றதையும் பெற்றதையும் மனம் உள்வாங்கியிருந்தது . உள் வாங்கியதை மனம் மறக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த அனுபவங்கள் அதைப் பழக்கமாக மாற்றி இருந்தது .

நான் படித்த கல்லூரி படிப்பு வரைக்கும் ஊரில் அடித்துத் துவைத்து என்னை வளர்த்திருந்தார்கள் . ஒழுக்க விதிகளை உள்ளே மருந்து போலப் புகுத்தியிருந்தார்கள் . பல கசப்புகளைப் பொறுத்து தான் அப்பாவுடன் வாழ்ந்திருந்தேன் .

ஆனால் மொத்த கசப்பின் மீதி இருந்த வெறுப்பைத் திருப்பூருக்குள் நுழைந்தவுடன் துப்பி விட்டேன் . ” வானமே வாழ்க்கையின் எல்லை ” என்பது போல ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது . மனம் போன வாழ்க்கை என நான் விரும்பிய வாழ்க்கை என்று எல்லா இடங்களுக்குச் சுற்றத் தொடங்கினேன் . ஆனால் எந்த நிலையிலும் அடுத்தவன் காசுக்கு ஆசைப்படவில்லை .

உறுத்தல்கள் ஒவ்வொரு நாளும் என்றுள் உருவாகிக் கொண்டே இருந்தது . மனிதர்களின் உடல் நலம் என்பது மனநலத்தோடு சம்பந்தப்பட்டது .

எனக்குள் உருவான உறுத்தல்கள் தினந்தோறும் தூங்க விடாமல் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது . தூக்கம் மறந்த இரவுகள் நாளுக்கு நாள் அதிகமாகத் தொடங்கியது . மனம் விழித்துக் கொள்ளத் தொடங்கியது . நானும் விழித்துக் கொண்டேன் . ஒழுக்க விதிகள் திசைகாட்டியாய் மாறத் தொடங்கியது .

நீங்கள் சிறுவயதில் பெற்றோர்களிடம் இருந்து பழகிய பழக்கங்கள் உங்களிடம் விட்டு அகலாது என்பது நம்புகின்றீர்களா ?

என்ன தான் வாழும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டாலும் உங்கள் குணாதிசியத்தின் அடிப்படைக் கட்டுமானமென்பது உங்கள் குடும்பத்திடம் இருந்த வந்ததாக இருக்கும் என்பது உணர்வீர்களா ?

அடிப்படைக் கட்டுமானத்தை ஓரளவுக்கு மேல் உங்களால் மாற்றி விட முடியாது என்பதை நம்புகின்றீர்களா ? என் அனுபவங்கள் இதைத்தான் எனக்குச் சுட்டிக்காட்டியது . நானும் இதையே தான் நம்புகின்றேன் .

நீங்கள் வாழ்ந்த குடும்பத்தை விட்டுத் தனியாக வந்து வேறொரு இடத்தில் வாழும் போது செய்யக்கூடிய அத்தனை தவறுகளையும் ஒரு நாள் உணரத்தான் செய்வீர்கள் . மற்றொன்று உங்கள் குடும்பதோடு வாழ்ந்த முதல் இருபது வருட வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட நல்லதும் கெட்டதும் உங்களைச் சரியான முழு உருவமாக மாற்ற அடுத்தப் பத்து வருடங்கள் ஆகும் . அப்படியும் மாறாவிட்டால் தவறு ஒன்றுமில்லை . சபிக்கப்பட்ட வாழ்க்கையை நீங்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம் .

மிரட்டியே வளர்க்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தின் உள்ளே நுழையும் போது தலைகீழாக மாறி விடுகின்றார்கள் . மற்றவர்களை மிரட்டி வதைத்து சுய இன்பம் காண்பவர்களாக இருந்து விடுகின்றார்கள் . குடும்பத்திற்குள் திருடிப் பழக்கமானவர்கள் மனதில் எவ்வித ஒழுக்க விதிகளும் அவர்களைச் சஞ்சலப்படுத்துவதில்லை .

பத்து லட்சம் மோசடி செய்பவர்கள் தொடங்கிப் பல்லாயிரம் கோடி திருடுகின்ற அத்தனை ‘ ஒயிட் காலர் ‘ கிரிமினல்களின் வண்டவாளங்களையும் நாம் தினந்தோறும் ஊடகங்களில் படித்துக் கொண்டு பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம் . அத்தனை பேர்களும் பணக்கார வாரிசுகளின் பிள்ளைகளாகத் தான் இருக்கின்றார்கள் . ஏதோவொரு விடுதியில் தங்கிப் படித்து அப்பா , அம்மா , அண்ணன் , தம்பி , அக்கா , தங்கை உறவு பற்றித் தெரியாதவர்களும் , வெளியுலகச் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டும் காணாமல் கடந்து போகக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் .

தனிநபர்களோ , மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களோ ? அல்லது அரசியல்வாதியோ , அதிகாரிகளோ ? எவருக்காகவது மோசடி வழக்கில் கைது செய்த பின்பு குற்ற உணர்ச்சி அவரவர் மனதில் குறுகுறுப்பை உருவாக்கும் என்றா நினைக்கின்றீர்கள் ? பத்திரிக்கை ஆசிரியர் என்ற பெயரில் இருந்து கொண்டு தர்மத்தை மீறி பகல் வேசம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் முதல் பள்ளிக்கூட ஆசிரியர் வரைக்கும் சமூகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அத்தனை பேர்களும் அவர்வர் வளர்த்துக் கொண்ட கொள்கைளும் கோட்பாடுகளும் தான் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியத்தை உருவாக்க காரணமாக உள்ளது , அவர்களின் ஆழ்மனதில் உள்ள வக்கிரங்கள் எழுத்தாக வார்த்தையாக வந்து விழுகின்றது என்பதைக் கவனித்துப் பார்த்தால் புரியும் .

அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இரட்டை வாழ்க்கை என்பதனை சரியென்பதை அவர்களின் மனமும் நம்பத் தொடங்க உள்ளே ஒரு வாழ்க்கை . வெளியே ஒரு வாழ்க்கை என்பதை எளிதாகக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் .

இதுவே தான் ஒரு தனிமனிதன் மூலம் மிகப் பெரிய சமூகக் கேடுகள் உருவாகி மொத்த சமூகத்தையும் பாதிப்படையச் செய்கின்றது . இப்படிப்பட்ட நபர்கள் தான் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் போது காலப்போக்கில் அந்த நிறுவனமும் அழிந்து போய் விடுகின்றது .

இங்குள்ள ஒவ்வொரு ஆயத்த ஆடை நிறுவனமும் அழிந்த கதைக்குப் பின்னால் யாரோ சிலர் மட்டுமே காரணமாக இருக்கின்றார்கள் . இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது .

அது போன்ற சமயங்களில் சம்மந்தப்பட்ட தனி நபர்களைப் பற்றியும் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சியையும் நன்றாகக் கவனித்த காரணத்தினால் இங்கே எழுத முடிகின்றது .

எனக்கு மிரட்டல் விடக் காரணமாக இருந்தவன் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் மாதம் இருபதாயிரம் தான் . ஆனால் இதைப்போலப் பத்து மடங்கு மாதந்தோறும் சம்பாரித்துக் கொண்டிருந்தான் .

இந்த நிறுவனத்தில் மட்டும் நான்கு வருடமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான் . இந்த அளவுக்குச் சம்பாரித்தவன் எந்த அளவுக்குச் சொத்து சேர்த்து இருப்பான் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன் . இந்த வருமானத்தை யாரோ ஒருவன் கெடுக்க நினைக்கின்றான் என்றால் அவனைச் சும்மா விட்டு விட முடியுமா ? அது தான் என்னை நோக்கி மிரட்டல் அஸ்திரத்தை பலர் மூலம் ஏவத் தொடங்கினான் .

மேலும் மிரட்டலை எதிர்கொள்வது என்பது ஒரு தனிக்கலை . அது உங்களுக்கு அனுபவத்தில் மட்டுமே கிடைக்கக்கூடும் . எனக்கும் பட்ட பின்பு தான் இந்த ஞானம் கிடைத்தது . சம்மந்தமே இல்லாமல் நமக்கு மேலே இருப்பவரிடம் திட்டு வாங்கும் போது முதலில் குழப்பமும் தொடர்ந்து வெறுப்புடன் ஆத்திரமும் வரும் . இது தான் ஆபத்தானது . எதிராளி நம் கோபத்தைத் தான் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் . நாம் கோபப்பட அவனுக்கு இலகுவாக ஆகி விடும் .

மேலும் நம் மேல் வன்மத்தை வார்த்தைகளாகத் துப்ப நம் நரம்புகள் கட்டுப்பாடு இழந்து என்ன பேசுகின்றோம் ? என்பதை அறியாமல் நாம் நம் சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவோம் . தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வந்து விழ காத்திருந்தவர்கள் விரித்த வலைக்குள் நாம் வலைக்குள் சிக்கிக் கொள்வோம் .

ஆனால் ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தாற் போல அலைபேசி அழைப்புகள் நள்ளிரவில் வந்த போது நான் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் கவனமாகவே கையாண்டேன் . ஒவ்வொருவரும் பலவிதமாகப் பேசி இறுதியில் உயிர் பயத்தைத்தான் காட்டினர்கள் .

” ரோட்டில் அடிபட்டு செத்துக்கிடப்பாய் ” என்றார்கள் . ” பிழைக்க வந்த ஊரில் உன் பிடிவாதத்தை மாற்றிக் கொள் ” என்று அறிவுறுத்தினார்கள் . சிரித்துக் கொண்டே இரவு நேரத்தில் அழைத்துப் பேசுறீங்களே ? காலையில் அலுவலகத்திற்கு வாங்களேன் ” என்றால் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும் .

மனிதர்கள் நேர்மையாக வாழ்வது என்பது அவர்களின் தனிப்பட்ட பிடிவாதமல்ல . அது இயல்பாகச் சிறு வயது முதல் வாழ்ந்த சூழ்நிலையில் அவரவர் குடும்பம் உருவாக்கும் ஒரு பழக்கம் . இடது கை , வலது கை போல இது நம் உடம்போடு ஒட்டியுள்ள ஒருவிதமான நம்பிக்கை .

சில அதிகாரிகள் பணி ஓய்வு வரைக்கும் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டே இல்லை என்பதை உங்கள் நினைவில் இருப்பவர்களை இப்போது யோசித்துப் பாருங்கள் . எதனால் அப்படி வாழ்ந்தார் ? என்று தற்போதை சமூகப் போக்கில் உங்களால் யோசிக்க முடிகின்றதா ? வாழ்க்கை என்பதைப் புரிந்து வாழ்பவர்களுக்குக் கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது . சமரசம் செய்து கொண்டு வாழ்பவர்கள் அத்தனை பேர்களிடமும் பணம் வந்து விழுந்து கொண்டே தான் இருக்கின்றது . ஆனால் தவறான வழியில் சம்பாரிப்பவர்கள் பொருள் ஈட்டுவதில் ஆர்வத்துடன் இருக்கின்றாகளே தவிர அதை வைத்து சுகமாய் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது . நேர்மையற்ற வழியில் சம்பாரிக்க முயற்சிக்கும் போது தொடங்கும் பயமென்பது அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது .

அதை மேலும் பெருக்குவதில் தொடங்கிக் கடைசி வரைக்கும் கட்டிக்காப்பது வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் பயம் தான் பிரதானமாகவே உள்ளது . அதிகப்படியான அழுத்தங்கள் மூளையைத் தாக்குகின்றது . ஒவ்வொரு நிலையிலும் மனம் உடம்பைத் தாக்க கடைசியில் உச்சி முதல் பாதம் வரைக்கும் நோயே வாழ்க்கை . கேழ்வரகு கஞ்சி ருசி தான் மிஞ்சுகின்றது .

கணக்கில் அடங்கா நோய்களும் உடம்புக்குள் வர வைக்கோல் போரை காத்திருந்த நாய் போலச் சொத்துக்களைச் சேர்த்து வைத்து விட்டு இறந்து போய்விடுகின்றார்கள் . கடைசியில் சொத்தை பங்கு போட பங்காளி என்ற பெயரில் வந்து விடுகின்றார்கள் .

எனக்கு நேர்மை என்ற வார்த்தைக்கெல்லாம் முழுமையான அர்த்தம் தெரியாது . நேர்மையாகத் தான் வாழ்வேன் என்ற பிடிவாதம் என்ற எண்ணம் கூட இல்லை .

ஆனால் இன்றைய தினப் பொழுதின் கடமை என்ன ? என்பதாகத்தான் இந்த வாழ்க்கையைப் பார்க்கின்றேன் . யாரோ ஒருவரிடம் மாதச்சம்பளம் பெறுகின்றோம் . அவர் நல்லவரா ? கெட்டவரா ? போன்ற ஆராய்ச்சிகளை விட அவரிடம் வாங்கும் பணத்திற்கு ” என் கடமையைச் செய்து விட வேண்டும் ” என்பதில் குறியாக இருந்தேன் .

மேலும் ஒவ்வொரு நிறுவனமாக மாறும் போது நான் கவனித்து வந்த மற்றொரு விசயம் ஒவ்வொரு இடங்களிலும் திருடிப் பிழைப்பவர்களின் மனோபாவத்தையும் இதன் காரணமாக அந்த நிறுவனம் அழிந்து போவதையும் பற்றி நிறையவே பார்த்துள்ளேன் .

ஒரு நிறுவனம் அழிந்து போவதென்பது ஒரு வளர்ந்த காட்டை அழிப்பதற்குச் சமமாகத் தெரிந்தது . ஒரு காடு அழிக்கப்படும் போது முதலில் பாதிக்கப்படுவது அங்கே உள்ள பல்லுயிர் பெருக்கமே . உயிருள்ள மற்றும் உயிரற்ற பலதும் பாதிப்படைவதை நீங்கள் பாடங்களில் படித்து இருக்கக்கூடும் . அழிந்த காட்டின் சமநிலை மாறி அதன் பாதிப்புகள் அடுத்தடுத்து வெவ்வேறு நிலையில் தாக்கும் .

நானும் திருப்பூரில் உள்ள நிறுவனங்களை அப்படித்தான் பார்க்கின்றேன் .

ஒரு ஆயத்த ஆடை நிறுவனம் லாப நோக்கில் செயல்படுகின்றது . சுற்றுப்புறத்தை நாசம் செய்கின்றது . மனிதர்களை அடிமையாக நடத்துகின்றது என்று எத்தனை குற்றச் சாட்டுகளை வைத்தாலும் ஒவ்வொரு நிறுவனமும் ஆயிரக்கணக்கான நபர்களின் குடும்ப வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டு உள்ளது என்பதை உங்களால் உணர முடிகின்றதா ?

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுடன் திருப்பூர் என்ற ஊர் பலவிதங்களில் தொடர்பு கொண்டிருந்த போதிலும் குறிப்பாகத் தர்மபுரி , திருவண்ணாமலை , பெரம்பலூர் , திருச்சி , தஞ்சாவூர் , சிவகங்கை , இராமநாதபுரம் , மதுரை போன்ற ஏழு மாவட்டங்களில் உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் காமதேனு பசுவாக விளங்கிக் கொண்டிருப்பது திருப்பூரே .

ஓடுக்கப்பட்ட மக்கள் , வாழ வசதியில்லாதவர்கள் , இனி இங்கே வாழவே முடியாது என்ற நிலையில் வாழ்பவர்கள் , கணவனை இழந்து வாழும் பெண்கள் , மனைவியிடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிய புண்ணியவான்கள் , தம்பி தங்கைகளைப் படிக்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் , பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல் தவிப்பவர்கள் , கல்லூரி படிப்புகளை முடித்து விட்டு கலங்கரை விளக்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என்று மிகப் பெரிய பல்லுயிர் பெருக்கத்திற்குத் திருப்பூர் தான் கடந்த இருபது ஆண்டுகளாக உதவி கொண்டிருக்கின்றது .

இந்தச் சமயத்தில் நம் அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்ற தேவையற்ற கேள்வி உங்கள் மனதில் எழ வேண்டுமே ? இந்திய அரசாங்கம் என்பதும் இந்தியாவின் ஜனநாயகம் என்பதும் ஒரு விதமான பாவனைப் போன்றது .

நம்முடைய இந்த அமைப்பு என்பது இந்திய ஜனத் தொகையில் ஒரு கோடி மக்களுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . அவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ அனைத்து வகையிலும் உதவி கொண்டிருக்கின்றது . இது அரசியலின் வேறொரு புறத்தை உணர்ந்தவர்களுக்குத் தெரியும் தானே ?

எந்த அதிகாரவர்க்கத்தினர் தனிப்பட்ட நபர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றியுள்ளனர் . மேலை நாடுகள் போலத் தனிமனிதர்களின் மனித உரிமைகளைப் பற்றிக் கவலைப்படுகின்றனர் ? அரசாங்கம் கொடுத்தே தீரவேண்டிய கல்வி , பொதுசுகாதாரம் , அடிப்படைக் கட்டுமானம் போன்றவை கூட இங்கே இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை மறுக்கக் கூடியவரா நீங்கள் ?

திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது . மேலும் இங்கே காலந்தோறும் ஒவ்வொரு தனிமனிதர்களும் குட்டிக்கரணம் போட்டுத் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் . மேலும் இவர்கள் கட்டும் வரிப்பணத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரில் ஆட்சியாளர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் .

சாதாரண மக்கள் வங்கியில் போடும் சேமிப்பைத் தூக்கி பெரு நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு வருடந்தோறும் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்துகின்றார்கள் .

மொத்தத்தில் திருப்பூர் , சிவகாசி , நாமக்கல் , ஈரோடு , கரூர் போன்ற தொழில் நகரங்களின் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் வாழும் பல கோடி மக்களும் தங்கள் அடிப்படை வாழ்க்கையை வாழ உதவுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை .

மேலே நான் குறிப்பிட்டுள்ள ஏழு மாவட்டங்களில் திருப்பூருக்குள் நுழைந்து சாதாரணக் கூலித் தொழிலாளியாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி , அவரவர் குடும்பத்திற்குப் பங்காற்றிய மகத்தான அர்ப்பணிப்பை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் உங்களுக்கு எழுதி புரிய வைக்க விரும்புகின்றேன் .

இப்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கும் தனிப்பட்ட சில நபர்கள் செய்யும் தவறான செயல்பாடுகளின் காரணமாக ஒரு நிறுவனம் எப்படி அழிந்து விடுகின்றது என்பதைப் பார்ப்போம் .

நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் PURCHASE DEPARTMENT என்று தனியாக ஒரு பிரிவு இருக்கும் . அதில் PURCHASE MANAGER என்ற பதவியும் அவருக்கு எடுபிடியாகப் பலரும் இருப்பார்கள் . ஆயத்த ஆடைத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் எப்படியெல்லாம் சம்பாரிக்கின்றார்கள் என்பதை இப்போது பார்க்கலாம் .

ஒரு நிறுவனத்தில் புதிதாக ஒரு ஒப்பந்தம் உள்ளே வரும் போது மாதிரி உடைகளைப் பேட்டன் மாஸ்டர் தைத்துப் பார்த்து தனது பணியைத் தொடங்குவார் . நிறுவனத்தில் பயன்படுத்திய பல விதமான பழைய துணிகள் இருக்கும் .

சிலர் வெளியே இருந்து தான் துணி வாங்க வேண்டும் என்று சொல்லி ஐந்து கிலோ வாங்கிவிட்டு பத்து கிலோ துணிக்கான பணத்தை லவட்டுவார்கள் . இதைப் போல உள்ளே ஏற்கனவே தைத்த பலதரப்பட்ட ஆடைகளுக்குப் பயன்படுத்திய நூல் கண்டுகள் (STITCHING THREAD) இருக்கும் .

பேட்டன் மாஸ்டர் தான் எடுத்த நிற துணிகளுக்கு ஏற்ப தைக்கும் நூலை தனக்குக் கீழே இருக்கும் நபரிடம் சொல்ல அவர் இந்த நிற நூல்கள் நம்மிடம் இல்லை . வெளியே இருந்து தான் வாங்க வேண்டும் என்று சொல்வார் .

SAMPLE DEPARTMENT எதைக் கேட்டாலும் நிறுவனத்தின் காசாளர் உடனே பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது இங்கே உள்ள நிறுவனங்களில் எழுதப்படாத விதியாகும் . சிறிய நிறுவனங்களில் ஒவ்வொரு பணம் சார்ந்த செயல்பாடுகளும் முதலாளியின் பார்வைக்குச் சென்று அவரின் அனுமதி கிடைத்த பின்பே சம்மந்தப்பட்ட விசயங்களுக்குப் பண அனுமதி கிடைக்கும் .

பெரிய நிறுவனங்களில் அதற்கென்று இருக்கும் நபர்களிடம் அனுமதி பெற வேண்டும் . ஆனால் எப்பேற்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சாம்பிள் பீஸ் தைக்கின்றார்கள் என்றால் அதற்கு எந்த வகையில் பணம் தேவைப்பட்டாலும் உடனே வழங்கப்பட வேண்டும் . காரணம் காலத் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு SAMPLE DEPARTMENT என்பது யூனியன் பிரதேசம் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவது போலச் சிறப்பு அதிகாரங்களுடன் இருக்கும் .

இது போன்ற வசதிகள் உள்ள இந்தச் சாம்பிள் பீஸ்கள் தயாரிக்கும் துறை என்பது ஊழலின் தொடக்கத்தைத் தொடங்கி வைக்கும் .

பில் என்ற பெயரில் சில சமயம் துண்டுச் சீட்டுக் கொடுக்கப்படும் . குறிப்பிட்ட மாதிரி சாம்பிள் ஆயத்த ஆடை உருவாக்க பட்டன் தொடங்கி ஒவ்வொரு இடத்திற்கும் நகர்ந்து வரும்

ஏற்கனவே நாம் பேசியிருந்தோமே PRODUCTION FOLLOW UPS என்றொரு பதவியைப் போல SAMPLE FOLLOW UPS என்பதற்காக இங்கே மற்றொரு நபர் இருப்பார் . ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டு செல்பவர் பணம் பார்க்க வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் பேசி வைத்திருப்பார் .

இந்த ஆடைகள் அடுத்த மாதம் பத்தாயிரம் பீஸ் வரப் போகின்றது என்று அங்கே சொல்லிவிட அவரும் ஆர்வமாக இலவசமாகச் செய்து கொடுத்து விடுவார் . ஆனால் அங்கே சாம்பிள் பீஸ் காஜா பட்டன் அடித்தேன் , எம்பிராய்ட்ரி அடித்தேன் என்று ஒவ்வொரு இடங்களிலும் பணம் கொடுத்து வாங்கினேன் என்று கணக்குக் காட்டப்படும் .

இவையெல்லாம் நூறு இருநூறு சமாச்சாரம் . ஆனால் ஒரு நிறுவனத்தின் துணித்துறை என்பது தமிழக அரசின் பொதுப்பணித்துறை போன்றது . தொட்ட இடங்களில் எல்லாம் பணம் கொட்டக் கூடியது .

நிட்டிங் என்று சொல்லப்படுகின்ற அறவு எந்திரம் , துணியை வண்ணமாக்க சாயப்பட்டறை என்று தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கமிஷன் வைத்துக் கொண்டாலும் அந்தந்த துறைக்குப் பொறுப்பாக உள்ளவர்கள் மாதந்தோறும் ஐம்பதாயிரத்திற்குக் குறையாமல் சம்பாரிப்பார்கள் . இன்று வரையிலும் முதலாளியை விடச் செழுமையாக இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஆனால் கடந்த நாலைந்து வருடமாக மற்றொரு கலாச்சாரத்தை இங்கே பார்க்கின்றேன் .

வெளியே இருந்து அழைத்து வரப்படுகின்ற ஒப்பந்தக்கூலியிடம் தனிப்பட்ட ஆதாயம் பார்ப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றார்கள் . கமிஷன் , உள் கமிஷன் அதற்கு மேலும் உள்ளடி கமிஷன் என்று விரிந்து போய்க் கொண்டேயிருகின்றது . கடைசியில் உழைத்தவன் சக்கையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியதாக உள்ளது .

சமீபத்தில் ஒரு நிறுவன முதலாளி சொன்ன குற்றச்சாட்டு மொத்தத்திலும் வித்தியாசமானது . அவரது நிறுவனத்தில் தினந்தோறும் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வருபவர்களின் ஷிப்ட் கணக்கில் ஒருவர் ஒரு வருடமாகப் புகுந்து விளையாடி உள்ளார் . ஒரு நாளில் இரண்டு வேலை வர வேண்டும் என்பது நிறுவன விதி . ஆனால் ஒரு நேரம் மட்டும் அவர்களை வரவழைத்து விட்டு இரண்டு நேரமும் வந்தது போல ஷிப்ட் போட்டு காசு பார்த்துள்ளனர் . இதனை அவர் ஒரு வருடமாகச் செய்துள்ளார் என்பதைச் சமீபகாலத்தில் தான் கண்டுபிடித்தாரம் . எனக்குத் தெரிந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பணியாற்றும் பர்சேஸ் மேனேஜர் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் . அவர் வாங்கும் சம்பளம் மாதந்தோறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே .

இது போன்ற மனிதர்களைப் பற்றி நீங்கள் சொல்ல முடியும் ?

சமூகத்தில் இவர்களை ” பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ” என்று வகைப்படுத்துகின்றனர் .

கூச்சம் ஏதுமில்லாமல் ” காசே தான் கடவுளடா ” என்கிற ரீதியில் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும் . பல இடங்களில் முதலாளியின் சொந்தக்காரர்களைத் தான் பணம் புழங்கும் துறைகளில் வைத்திருப்பார்கள் . ஆனால் அவர்கள் முதலாளியின் கூடப்பிறந்த தம்பியாக இருந்தாலும் சரி அல்லது மனைவி வகைச் சொந்தமாக இருந்தாலும் சரி அவர்களும் முடிந்த வரைக்கும் புகுந்து விளையாடுபவர்களாகத்தான் இருக்கின்றார்கள் .

சாதி , மற்றும் உறவுப்பாசம் என்பது பலவற்றையும் சகித்துக் கொள்ள உதவுகின்றது என்பதைப் பல அனுபவங்கள் வாயிலாகக் கண்டுள்ளேன் .

ஆனால் எனக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த பேப்ரிக் மேனேஜர் இந்த நிறுவன முதலாளியின் சொந்தக்காரர் அல்ல . ஆனால் அவர் மச்சினர் சொந்தக்காரர் போல முதலாளியின் உள்வட்டத்தில் இருந்த காரணத்தால் இவன் செய்து கொண்டிருந்த எந்தத் தவறுகளையும் எவராலும் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்குச் சுட்டித்தனங்கள் செய்து கொண்டிருந்ததை உணர்ந்து கொண்டேன் .

ஆயிரம் கிலோ நூல் வருகின்றது என்றால் அவன் பேசி வைத்துள்ள அறவு எந்திரங்கள் உள்ள நிறுவனத்திற்குச் சென்று விடும் . ஒவ்வொரு ஒப்பந்தங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்க மாதத்தில் ஒரு அறவு எந்திர நிறுவனத்திற்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் கிலோ அளவுக்குச் சென்று விடும் . இதே போல ஐந்து இடங்களுக்குச் செல்லும் போது ஐம்பதாயிரம் கிலோ சேர்ந்து விடும் . அறவு எந்திரத்தில் ஓட்டப்படும் துணிக்குக் கூலியாகக் கிலோவுக்கு ஒன்பது ரூபாய் என்கிற ரீதியில் நிறுவனத்திற்குப் பில் வரும் . ஆனால் அந்த ஒன்பது ரூபாயில் இவனுக்கு உண்டான ஒரு ரூபாய் தனியாகக் கொடுத்து விடுவார்கள் .

ஒவ்வொரு பில்லும் பாஸ் ஆகும் போது ஒரு ரூபாய் கமிஷன் ஒவ்வொரு இடத்திலும் இருந்து வந்து விடும் . இதே போலத் துணியான பின்பு சாய்ப்பட்டறைக்குச் செல்லும் . அங்கேயும் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் முதல் நிறத்திற்குத் தகுந்தாய் போல ஐந்து ரூபாய் வரைக்கும் பேசி வைத்திருப்பான் .

அந்தத் தொகை முந்தைய தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் . அடுத்தத் துறையான காம்பேக்ட்டிக் துறையிலும் ஐம்பது பைசா முதல் தொடங்கும் . மொத்தத்தில் நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தில் இந்தத் துணித்துறையில் இருப்பவர்கள் மாதம் தோறும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயை தனியாகச் சம்பாரித்து விடுவார்கள் .

ஆயத்த ஆடைத்துறையில் உள்ள துணித்துறைப் போல மற்றொரு பகுதி ACCESSORIES DEPARTMENT. இதுவும் பணம் கொழிக்கும் துறையாகும் .

ஒரு ஆய்த்த ஆடை இறுதி வடிவம் பெற STITCHING THREAD. ZIP, BUTTONS, FOAM, CARTON BOX. POLY BAGS, TAPES, என்று பலதரப்பட்ட சமாச்சாரங்கள் தேவைப் படுகின்றது . இது போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலையில் இந்தத் துறையின் மேனேஜர் இருப்பார் .

எல்லா இடங்களிலும் சமய சந்தர்ப்பத்திற்கேற்ப கமிஷன் வைக்க அதுவும் பெரியதொகையாக மாறி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிக் கொண்டிருக்கும் .

எனக்குத் திருப்பூருக்குள் நுழைந்த முதல் ஐந்து வருடங்களில் இது போன்ற ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டே வந்த போது முதலில் பயம் வந்தது . பிறகு படபடப்பை உருவாக்கியது . ஒவ்வொன்றுக்குப் பின்னால் உள்ள அரசியல் புரிய ஆரம்பித்தது .

இது போன்று சம்பாரித்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேர்களிடமும் ஒரு தனித்திறமை இருப்பதைக் கண்டு கொள்ள முடிந்தது . ” எந்த எல்லைக்கும் செல்லலாம் ” என்கிற ரீதியில் அவர்கள் மூளை எந்தச் சூழ்நிலையிலும் சுறுசுறுப்பாக இருந்ததைப் பார்த்த போது வாழ்வியலின் பல பரிணாமங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது .

” தன் நலத்திற்க்காக சமூகக் கட்டுப்பாடுகள் தேவையில்லை ” என்பதை ஒருவர் எனக்குச் சொல்லி புரிய வைத்தார் . ஆனால் அவர் மனைவியை முதலாளியிடம் தொடர்ச்சியாகத் தாரை வார்த்துக் கொண்டிருந்ததைப் பிறகு தான் புரிந்து கொண்டேன் .

உற்பத்தித் பிரிவில் இருப்பவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளை விட முதலாளி உள்ளே பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்களில் யார் மேல் ஆசை வைத்துள்ளார் ? என்பதை அறிவதிலும் அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப் பார்த்த போது மனித வாழ்க்கையின் ஒழுக்க விதிகள் ஓரக்கக்ண்ணால் பார்த்து என்னைச் சிரித்தது .

இவற்றை எல்லாம் தாண்டி மனம் பக்குவடைந்த நிலையில் இப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனத்தில் இருந்தாலும் மனிதர்களின் ஆசைகள் குறித்து மட்டும் இடைவிடாத ஆராய்ச்சி என்னுள் ஓடிக் கொண்டேயிருந்தது . ஆனால் காலத்தின் கோலம் நானே இங்கே ஆராய்ச்சியானமாக மாறிப் போனேன் . என் ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவிலும் பல லட்ச ரூபாய் பெறுமான திருட்டுத்தனங்கள் வெளியே வரத் தொடங்கியது .

இதன் காரணமாகப் பல எதிரிகளை ஒரே நாளில் பெறவும் முடிந்தது .

ஒரு தொடக்கம் என்றால் முடிவு என்று இருக்கத்தானே வேண்டும் . முதலாளி குறிப்பிட்ட நாள் சொல்லி என்னைப் பார்க்க வரச் சொல்லியிருந்தார் .

பெரிய கோப்பு ஒன்றை உருவாக்கியிருந்தேன் . ஒவ்வொரு ஒப்பந்ததிற்கும் உண்டான கணக்கு வழக்குகள் , விடுபட்ட தகவல்கள் , அது எதனால் விடுபட்டது ? எங்கே தவறு நிகழ்ந்தது , அதற்கு யார் பொறுப்பு ? அதன் மூலம் பலன் அடைந்தவர்களின் பட்டியல் , சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாகச் சுட்டிக் காட்டியிருந்தேன் .

இதை விட மற்றொரு முக்கியமான சமாச்சாரத்தை அதில் சுட்டிக் காட்டியிருந்தேன் . நேர்மையாகச் செயல்பட்டு நிறுவனத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்டு செயல்பட்டவர்களை எப்படி இவர்கள் காசுக்கு ஆசைப்பட்டுப் புறக்கணித்தார்கள் என்பதை அந்தந்த நிறுவனங்களை அழைத்து அவர் தரப்பு வாதங்களையும் சிறு குறிப்பாக எழுதி வைத்திருந்தேன் . கீழே நான் பேசிய நபர்களின் அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு இருந்தேன் .

அன்று நான் முதலாளியிடம் கொடுத்த கோப்பு என்ன விளைவுகளை உருவாக்கும் ? என்பதில் நான் அக்கறை காட்டவில்லை . காரணம் நான் தங்கையின் திருமணத்திற்காக ஊருக்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தேன் . ஏற்கனவே முதலாளியிடம் சொல்லி வைத்திருந்தேன் . நான் பக்கத்தில் இல்லாவிட்டாலும் அந்தக் கோப்பு அனைத்து விபரங்களையும் எவருக்கும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கியிருந்தேன் .

அனைத்தையும் கோர்த்து தெளிவாக ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் செய்யப்பட்ட கோல்மால்கள் , வெளியே சென்று மீண்டும் உள்ளே வராத நூல்கள் எத்தனை கிலோ என்பதையும் , உள்ளே வந்தது போல எழுதப்பட்டு இருந்த கணக்கு வகைகள் , தரமில்லாத துணி என்று நல்ல துணியை விற்றுத் தனியாக அடித்த கமிஷன்கள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தேன் . என் வேலை முடிந்தது . முதலாளியிடம் ஒப்படைத்து விட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பினேன் .

மூன்றாவது நாள் ஊரில் இருந்த போது எனக்கு அலுவகத்தில் இருந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது .

அது அவரின் அலுவக எண் இல்லை . பேசிய பின்பே அவர் தனிப்பட்ட எண் என்பதை உணர்ந்து கொண்டேன் .

” முக்கியப் பதவிகளில் இருந்த ஆறு பேர்களின் பதவி பறிக்கப்பட்டுக் குறிப்பிட்ட தொகையைக் கட்டச் சொல்லி எழுதி வாங்கியிருப்பதாக ” முதல் தகவல் அறிக்கையைச் சொன்னதோடு அடுத்து அவர் சொன்ன தகவல் எனக்குச் சப்தநாடியையும் அடங்கி விடச் செய்தது .

பேப்ரிக் மானேஜர் அதிகாலை சாலை விபத்தில் (?) பலியானதாகச் சொன்னார் .

திருப்பூருக்குள் நுழைந்தவன் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடி மற்றொரு நிறுவனத்திற்கு அடுத்தக் கட்ட பதவிக்கு உயர்ந்து சென்று விட்டேன் .

அந்த நிறுவனத்தில் அப்பாவுக்குத் தெரியாமல் மகனும் மகனுக்குத் தெரியாமல் அப்பாவும் மாறிமாறி அவர்கள் நிறுவனத்திலேயே திருடிக் கொண்டிருந்தார்கள் . ஆனால் இரண்டு பேர்களின் பணமும் இறுதியில் ஒரே பெண்ணிடம் சென்று கொண்டிருந்தது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *