2

1. பஞ்சபாண்டவர்கள்

“ சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்”

என் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன் .

இருபது வயதுக்குரிய இளமையும் , அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம் . அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன் .

“ சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள் . இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார் .

வாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை ? என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா ?” என்று சைகையால் கேட்டேன் . அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே ?“ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா ?” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார் .

“ பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம் . நிறுவனத்தில் மொத்தமாக ஐந்து இயக்குநர்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி . மனிதவளம் , நிதி , நிர்வாகம் , உற்பத்தி , சந்தைப்படுத்துதல் ( மார்க்கெட்டிங் ) என்று ஒவ்வொருவரும் அவரவர் துறையில் கில்லாடி ரங்காவாக இருப்பது பிரச்சனையல்ல . பேசியே கொன்று விடுவார்கள் . அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் . எனக்கு எப்போது செயலாக்கம் முக்கியம் . பேசும் நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்து விடலாமே ? என்று பரபரப்பாய் செயல்படுவேன் .

ஆனால் அவர்களோ ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் விதமான அறிக்கையை ( ரிப்போர்ட் ) எதிர்பார்ப்பார்கள் . அவர்கள் எதிர்பார்க்கின்ற அறிக்கைகள் இல்லாமல் வாயைத் திறந்தால் என்றால் தயவு தாட்சண்டயமில்லாமல் ‘ கெட் அவுட் ‘ என்பார்கள் .

அவர்கள் விருப்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்த போதிலும் நான் பணிபுரியும் சூழ்நிலையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் என்னை அவர்கள் விரும்பும் நடைமுறைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாய் இருப்பார்கள் . என்னால் அவர்கள் வட்டத்தில் பொருத்திக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறி வேர்த்து விறுவிறுத்து விக்கிப்போய் நிற்பேன் .

அவர்கள் விரும்பும் நிர்வாகம் மேலைநாட்டு முறையைச் சார்ந்தது . ஆனால் உள்ளே நிறுவன செயல்பாடுகளோ கூவம் நதிக்கரையின் ஓரத்தில் கூவிக்கூவி காய்கறி விற்கும் நிலையில் இருக்கும் . இதையெல்லாம் விட மற்றொரு முக்கியமான பிரச்சனை ஒன்று உண்டு . உற்பத்திக்கான இயக்குநர் என்ற பதவியில் இருந்த பெண்மணி நிறுவன முதலாளியின் மனைவி . அவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் . இயல்பாகவே அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் .

அவர் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்வார் . ” அதற்கு வாய்ப்பில்லை . இப்படித்தான் நடைமுறையில் சாத்தியமாகும் ” என்பேன் . அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும் .

” நான் ஐஈ (INDUSTRIAL ENGINEER) துறையிடம் கேட்டுவிட்டேன் . அவர்கள் சாத்தியமே என்கிறார்கள் . ஏற்றுமதி தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகள் உண்டு . அதில் ஒன்று ஐஈ . அவர்களின் முக்கியமான பணி என்பது ஒரு ஆடையை எத்தனை பேர்கள் வைத்து தைக்க வேண்டும் . எத்தனை மணி நேரத்தில் தைத்து முடிக்க வேண்டும் ? எத்தனை எந்திரங்கள் கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கணக்கீடுகள் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து என்னைப் போன்ற உற்பத்திப் பிரிவில் உள்ள உயர் பதவியில் உள்ளவர்களிடம் கொடுக்க அவர்கள் சொல்வதை இம்மி அளவு கூடப் பிசகாமல் நிறைவேற்ற வேண்டும் .

காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை விட அது குறித்து எவரும் கவலைப்படவே மாட்டார்கள் . தொழிலாளர்கள் வந்தார்களா ? வராமல் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தார்களா ? போன்ற நடைமுறை எதார்த்தங்களைக் குறித்துக் கவலைப்படாமல் எல்லாமே ‘புள்ளிவிபரப்புலி’ போலவே கணக்கு அடிப்படையில் செயல்பட வேண்டும் நினைக்கும் புத்திசாலிகள் அடங்கிய கூட்டமது . எனக்கு இந்த இடத்தில் தான் பிரச்சனைகள் உருவாகும் . ஐம்பது பேர்கள் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை எப்படி முப்பது பேர்களால் முடியும் ? என்று கேட்டால் அது உன்பாடு ? என்று ஒதுங்கி விடுவார்கள் .

இயக்குநராக இருக்கும் பெண்மணிக்கு ஐஈ கூட்டம் சொல்வது தான் வேதவாக்காக இருக்கும் . வாக்குவாதம் செய்தால் ” நான் சொல்வதை மட்டும் செய் ” என்பார் . நானும் விடாப்பிடியாக ” அப்படியென்றால் என் பதவியில் நீங்க சொல்வதைக் கேட்கும் நபரை வைத்திருக்கலாமே ?” என்பேன் .

அவர் முகம் சிவந்து விடும் . அவர் கணவர் குறுக்கிடுவார் . மனைவியின் பெயரைச் சொல்லி ஆங்கிலத்தில் மென்மையாகச் சொல்வார் . ” அவர் ஏற்கனவே டென்சன் பார்ட்டி . நீ அவருக்கிட்டே பேசப் பேச அவரும் பேசிக் கொண்டே தான் இருப்பார் . உனக்கு என்ன வேண்டுமோ ? அதை மட்டும் கேட்டுப் பழகு ? மற்ற விசயங்களை அவரே முடிவு செய்யட்டுமே ?” என்பார் . மற்ற இயக்குநர்களும் எனக்கு ஆதரவாகக் களத்தில் இறங்குவார்கள் .

கணவர் சொல்லி நிறுத்தியதும் அவர் முகம் மாறத் தொடங்கும் . ஏற்கனவே கோதுமை நிறத் தோலில் இருக்கும் அவரின் முகப் பொலிவில் ரத்த ஓட்டம் அதிகமாவதைப் பார்க்க முடியும் . இதன் காரணமாகப் பெரும்பாலான கூட்டத்திற்கு என்னை அழைத்தால் அவர் இருக்க மாட்டார் . என் திமிர்த்தனத்தையும் இந்தப் பாஞ்ச் கூட்டம் பொறுத்துக் கொள்ள முக்கியக் காரணம் ஒன்று உண்டு . அவர்கள் கேட்கும் உற்பத்தியை விட இரண்டு மடங்கு எடுத்துக் கொடுத்து விடுவதுண்டு .

உற்பத்தி இயக்குநரின் அடுத்த நிலையில் இருந்த எனக்குக் கொடுத்திருந்த பதவி ‘ உதவி உற்பத்தி இயக்குநர் ‘. ஒரு பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் புரொடக்சன் மானேஜர் , பேக்டரி மானேஜர் என்ற இரண்டு பதவிகள் உண்டு . அதற்கு மேலே உற்பத்திக்கான பொது மேலாளர் ( ஜெனரல் மேனேஜர் ) என்ற பதவியும் உண்டு .

ஜி . எம் . பதவிக்குப் பதிலாக இங்கே இயக்குநர் என்ற பதவியை உருவாக்கியிருந்தார்கள் . முதலாளியின் பெண்மணிக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்ததே தவிர அவர் அலங்கார பொம்மையாகத்தான் இருந்தார் . அவரை நான் தான் இயக்கிக் கொண்டிருந்தேன் .

இந்தச் சமயத்தில் ஒரு கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்து விடுகின்றேன் . திருப்பூர் பற்றிச் சில தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்களேன் .

திருப்பூர் என்றால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவுக்கு வரும் ? சிலருக்குப் பள்ளியில் படித்த திருப்பூர் குமரன் குறித்துத் தெரிந்துருக்க வாய்ப்புண்டு . இன்னும் சிலருக்கு பனியன் ஜட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் என்று தோன்றும் . ஆனால் இந்தியாவின் அந்நியச் செலவாணியைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான ஊர் திருப்பூர் .

ஏறக்குறைய வருடந்தோறும் 15000 கோடிகளுக்கு மேல் திருப்பூர் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது . 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்த ஊர் நம்பியிருப்பதும் , நம்பிக்கையுடன் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நம்பி கை வைத்திருப்பது பஞ்சின் மேல் மட்டுமே . பஞ்சு தான் நூலாக மாறுகின்றது . நூல் தான் விதவிதமான அளவுகளில் ஆடைக்குத் தேவையான துணியாக மாற்றம் பெறுகின்றது . வண்ணங்கள் சேர இறுதியில் வெட்டி தைக்கப்பட்ட ஆடைகள் உலகில் உள்ள முக்கியமான அத்தனை நாடுகளுக்கும் விமானம் / கப்பல் வழியாகப் போய்ச் சேருகின்றது .

இந்தியாவில் பஞ்சு விளைச்சல் அதிகமுள்ள மாநிலம் குஜராத் . அதனைத் தொடர்ந்து ஆந்திரா . “ எல்லாமே பஞ்சு பஞ்சாய் பறந்து போச்சு” என்று பேச்சு வாக்கில் பலரும் சொல்லக் கேட்டு இருப்பீங்க ? இந்தப்பஞ்சு பல கோடி வர்த்தகத்தை ஆளக்கூடியது . பல கோடி மக்களையும் இந்தியாவில் இந்தத் துறை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது .

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விளையக்கூடிய பஞ்சுப் பொதிகள் தான் திருப்பூரை வாழ வைத்து மக்களை வாழ்வில் உயர வைத்துக் கொண்டிருக்கின்றது . விளைச்சலில் வந்த பஞ்சுப் பொதிகளைத் தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிப் பொதுச் சந்தைக்குக் கொண்டு வருகின்றார்கள் . பஞ்சு தன் பயணத்தைத் தொடங்குகின்றது . பல தொழில் நகரங்களுக்குச் செல்கின்றது .

பல நிலைகளில் சுத்தப்படுத்தப்படுகின்றது . வகை வகையாகத் தரம் பிரிக்கப்படுகின்றது . பஞ்சாலைக்குச் சென்று இறுதியில் தரம் வாரியான நூலாக மாறுகின்றது . இறுதியில் இந்த நூல் தான் திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வருகின்றது .

திருப்பூருக்குள் இரண்டு விதமான உலகம் உண்டு . ஒன்று உள்நாட்டுக்கு (LOCAL MARKET) மட்டும் என்று செயல்படும் பனியன் , ஜட்டி சம்மந்தப்பட்ட தயாரிப்பு வகைகள் . மற்றொன்று ஹொசைரி கார்மெண்ட்ஸ் (HOSIERY GARMENTS) என்றழைக்கப்படும் (EXPORT MARKET) வெளிநாட்டு வர்த்தகம் . இந்த வர்த்தகத்தில் பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளது . ஒவ்வொன்றைப்பற்றியும் படிப்படியாகப் பார்ப்போம் .

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பின்னலாடைத் தொழில் இருந்த போதிலும் கடந்த இருபது ஆண்டுகளாகத் திருப்பூர் என்ற ஊரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை . ஆனால் இன்றுவரையிலும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது கசப்பான உண்மை . தொடக்கத்தில் கோயமுத்தூர் மாவட்டத்திற்குள் ஒரு சிறிய ஊர் என்கிற அளவில் இருந்த திருப்பூர் 2009 முதல் தனி மாவட்டம் என்ற அந்தஸ்துடன் உயர்ந்து இன்று மாநகராட்சி என்ற நிலைக்கு மாறியுள்ளது .

ஒவ்வொரு காலகட்டத்திலும் திருப்பூர் மாறிக் கொண்டே தான் வந்துள்ளது . அதேபோலச் சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவும் மாறியுள்ளனர் . இன்றைய சூழலில் பின்னலாடைத் தொழில் (KNITS) என்பது சர்வதேசத்துடன் போட்டியிட்டே ஆக வேண்டிய தொழிலாக உள்ளது .

உலகளாவிய போட்டியில் வெல்ல வேண்டிய பலதரப்பட்ட சவால்கள் இந்தத் தொழிலுக்கு உள்ளது . சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய திருப்பூர் பின்னலாடைத் தொழில் என்பது திருப்பூரில் எப்படியுள்ளது ?

இங்குள்ள நிறுவனங்களின் நிர்வாக முறைகள் , அணுகுமுறைகள் மாறியுள்ளதா ? காலத்திற்கேற்ப இந்தத் தொழில் வளர்ந்துள்ளதா ? இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் நிலை எப்படியுள்ளது ? இந்திய அரசாங்கம் திருப்பூரை எப்படிப் பார்க்கின்றது ? போன்ற பல கேள்விக்குறிக்கான பதிலை நாம் தேட வேண்டும் . யோசித்துக் கொண்டே என் அறையை விட்டு வெளியே வந்து முதல் தளத்திற்குச் செல்லும் மாடிப்படியில் ஏறத் தொடங்கினேன் .

முதல் தளத்தில் தான் அலுவலகம் சார்ந்த முக்கியக் கூட்டங்கள் நடக்கும் அறையுள்ளது . அதே அறையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுடன் கூடிய கலந்துரையாடலும் நடக்கும் . வெளிநாட்டில் இருந்து வருபவர்களைப் பையர் ( BUYER ) என்கிறார்கள் . அவர்கள் ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கின்ற ஒப்பந்தங்களை ஆடர் (ORDER) என்கிறார்கள் . பையர் என்றால் திருப்பூர் முதலாளிகளுக்குக் கடவுள் என்று பெயர் . பலரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்தக் கடவுளே காரணமாக இருப்பார் . பஞ்சபாண்டவர்கள் எதற்காக நம்மை அழைக்கின்றார்கள் ? என்பதை யோசித்துக் கொண்டே மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தேன் . அப்போது தான் இந்த நிறுவனத்திற்குள் வந்த கதை என் மனதிற்குள் நிழலாடியது .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book